விஜய் குறிப்பிட்ட சர்க்காரியா கமிஷன் சொல்வது என்ன? கலைஞர் குற்றவாளியா? நிரபராதியா? – Kumudam

Spread the love

தமிழ்நாடு அரசியலில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் பெயர் – சர்க்காரியா கமிஷன்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட இந்த ஒரு நபர் விசாரணைக் கமிஷன், தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

இன்று(செப்., 07), காவல்துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷனை குறிப்பிட்டு திமுகவை விமர்சித்தார். 

இந்த நிலையில், அரசியல் களத்தில் சர்க்காரியா கமிஷன் மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அந்த கமிஷன் உண்மையில் என்ன விசாரித்தது? எத்தனை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன? “கருணாநிதி குற்றவாளி” என்று கமிஷன் தீர்ப்பு அளித்ததா? என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

இதன் பின்னணி என்ன?

1972-ல் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேறிய பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மீது பல்வேறு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நவம்பர் 1972-ல் எம்.ஜி.ஆர். அப்போதைய குடியரசுத் தலைவரிடம் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை அளித்ததாக நாடாளுமன்றப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் தலைவர் எம். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும் கருணாநிதி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பின்னர், இந்த குற்றச்சாட்டுகள் மத்திய அரசின் பரிசீலனைக்கு சென்றன.

எத்தனை குற்றச்சாட்டுகள்?

சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை குறித்து அரசியல் விவாதங்களில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டாலும், கமிஷன் தொடர்பான பதிவுகளில் 28 முக்கிய குற்றச்சாட்டுகள் விசாரணை வரம்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் கருணாநிதி மட்டுமின்றி, அவரது அமைச்சர்கள் மற்றும் அப்போதைய தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பான ஊழல், நிர்வாக முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியிருந்தன.

மெகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், கோபாலபுரம் வீடு, டிராக்டர், பதிப்பகம், ஏரியல் ஸ்பிரேயிங், நிலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குற்றச்சாட்டு பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

சர்க்காரியா கமிஷனை அமைத்தது எம்.ஜி.ஆரா?

இங்குதான் மிக முக்கியமான ஒரு உண்மையை பிரித்துப் பார்க்க வேண்டும். சர்க்காரியா கமிஷனை எம்.ஜி.ஆர். அமைக்கவில்லை. எம்.ஜி.ஆர். குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணை கோரியிருந்தார் என்பது உண்மை. ஆனால், சர்க்காரியா கமிஷன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது மத்திய அரசால், 1976-ல்.

1975-ல் நாடு அவசரநிலைக்குள் சென்றது. இதற்கிடையே மத்திய அரசுக்கும் தி.மு.க. அரசுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. இறுதியில், 1976 ஜனவரி 31-ல் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டது.

1976 ஜனவரி 31-ம் தேதி தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 3-ம் தேதி மத்திய அரசு, Commissions of Inquiry Act, 1952-ன் பிரிவு 3-ன் கீழ் விசாரணைக் கமிஷனை அமைத்தது. அதன் தலைவராக நியமிக்கப்பட்டவர் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா. இந்த நியமனம் தொடர்பான மத்திய அரசின் விளக்கத்திலும், 1972-ல் எம்.ஜி.ஆர். குற்றச்சாட்டு மனு அளித்திருந்தது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

கருணாநிதி நீதிமன்றத்தை நாடினார்

சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். கமிஷன் அமைப்பதற்கான மத்திய அரசின் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு சட்ட அம்சங்கள் அவரது மனுவில் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் 1976 ஏப்ரல் 29-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது, சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையே நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டிருந்தது.

28 குற்றச்சாட்டுகளில் என்ன நடந்தது?

சர்க்காரியா கமிஷன் தனது அறிக்கையில், 28 குற்றச்சாட்டுகளில் 7 குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனது findings-ஐ வெளியிட்டது.
அந்த விசாரணையில்… கருணாநிதி மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கமிஷன் கண்டறிந்தது. அதற்கான ஆதாரங்கள் குறித்து கமிஷன் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை.
“Cogent, convincing and reliable”

அதாவது…தெளிவான, நம்ப வைக்கும் வகையிலான மற்றும் நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக கமிஷன் குறிப்பிட்டது. இதுதான் சர்க்காரியா கமிஷன் findings-ன் முக்கியமான பகுதி. மீதமிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அப்போது தொடர வேண்டிய நிலையில் இருந்ததாக 1977-ம் ஆண்டு நாடாளுமன்ற விவாதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாடாளுமன்ற விவாதத்தில், 28 குற்றச்சாட்டுகளில் ஏற்கெனவே 7 குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 21 குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு மீதமுள்ளதாகவும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த 7 குற்றச்சாட்டுகள் என்ன?

  1. சர்க்காரியா கமிஷனின் முதல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய குற்றச்சாட்டுகளில்:
  2. கருணாநிதிக்கு டிராக்டர் வழங்கப்பட்ட விவகாரம்
  3. Nathan Publications
  4. Aerial Spraying
  5. எம்.எல்.ஏ. தொடர்பான கடன் விவகாரம்
  6. New Globe Theatre நில விவகாரம்
  7. அதிகாரிகளுக்கான மண் – அமைச்சர்களுக்கான பணம் என்ற குற்றச்சாட்டு
  8. ஏ.எல். சீனிவாசனுக்கு சலுகை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் போன்றவை இடம்பெற்றிருந்தன. கமிஷன் இந்த விவகாரங்களில் சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தது.

கருணாநிதி மீது கூறப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு – Aerial Spraying

இதில் கருணாநிதி மீதான முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று விமானம் மூலம் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் ஒப்பந்தம் தொடர்பானது. கமிஷன் findings படி… ஒரு aviation operator நிறுவனம், aerial spraying contract-ஐ பெறுவதற்காக லஞ்சமாக சுமார் ரூ.5.3 லட்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு இருந்தது. அந்த பணம் கருணாநிதிக்கும், அப்போதைய வேளாண்மை அமைச்சர் தர்மலிங்கத்திற்கும் வழங்கப்பட்டதாக கமிஷன் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் கமிஷன் ஆதாரங்களை ஏற்றுக்கொண்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அமைச்சர் தர்மலிங்கத்தின் சொத்து விவகாரம்

மற்றொரு குற்றச்சாட்டு அப்போதைய வேளாண்மை அமைச்சர் தர்மலிங்கம் தொடர்பானது. அவர் தி.மு.க. அமைச்சரவையில் சேரும்போது வருமான வரி செலுத்துபவராக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் சில ஆண்டுகள் அமைச்சராக இருந்த பின்னர்… நிலம், நகைகள், மேலும் ஒரு பாடப்புத்தக நிறுவனத்தில் partnership rights உள்ளிட்ட சொத்துக்கள் அவரிடம் இருந்ததாக கமிஷன் விசாரணையில் விவாதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு அரசின் பாடப்புத்தக விநியோக உரிமையும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கமிஷன் இந்த விவகாரத்தையும் தனது findings-ல் எடுத்துக்கொண்டது.

ப்ரூவரி லைசென்ஸ் – கருணாநிதி மீது நேரடி குற்றச்சாட்டு:

சர்க்காரியா கமிஷன் findings-ல் கருணாநிதி நேரடியாக தொடர்புபடுத்தப்பட்ட மற்றொரு முக்கிய விவகாரம்… Brewery licence. ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கு brewery licence வழங்க பரிந்துரை செய்தபோது, கருணாநிதி நடைமுறைகளையும், நிலைநிறுத்தப்பட்ட நிர்வாக விதிமுறைகளையும் மீறியதாக கமிஷன் கூறியது.
அதாவது… முதலமைச்சராக இருந்தவர் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக உரிமம் வழங்குவதில் அரசின் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதே குற்றச்சாட்டு.

ஒரு தனிநபருக்கு சாதகமாக சட்டம் மாற்றப்பட்டதா?

மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டு…வாடகைதாரர் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை மாற்றியமைத்தது. கமிஷன் விசாரணையில், குறிப்பிட்ட ஒருவருக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற மறைமுக நோக்கத்துடன் tenancy legislation-ல் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது… அரசின் சட்ட அதிகாரம் பொதுநலனுக்காக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டதா? என்பதே இந்த குற்றச்சாட்டின் மையம்.

“6 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன” – இதன் அர்த்தம் என்ன?

இந்த இடத்தில்தான் சர்க்காரியா கமிஷன் பற்றிய அரசியல் விவாதங்கள் சட்ட ரீதியான விவாதங்களாக மாறுகின்றன. கமிஷன் விசாரணையில் 7 குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிரூபிக்கப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால்…சர்க்காரியா கமிஷன் ஒரு குற்றவியல் நீதிமன்றம் அல்ல. அது ஒரு விசாரணைக் கமிஷன். எனவே, கமிஷன் அறிக்கையில் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்படுவது, அதுவே ஒரு நீதிமன்றம் வழங்கிய குற்றவியல் தீர்ப்புக்கு சமமானது என்று கூற முடியாது.

அதே நேரத்தில், “சர்க்காரியா கமிஷன் கருணாநிதி மீது எந்த குற்றச்சாட்டையும் ஏற்கவில்லை” என்று கூறுவதும் ஆவணங்களுடன் பொருந்தாது.அதாவது இரண்டு விஷயங்களையும் தனித்தனியாக பார்க்க வேண்டும்:

கமிஷன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்மறையான கண்டறிதல்களை வழங்கியது – ஆம்.

கருணாநிதி மீது குற்றவியல் நீதிமன்றம் தண்டனை வழங்கியது – அது வேறு விஷயம்.

அப்படியானால் “கலைஞர் குற்றவாளியா?”

சர்க்காரியா கமிஷன் அறிக்கையை மட்டும் வைத்து “நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர்” என்று கருணாநிதியை குறிப்பிடுவது சட்ட ரீதியாக சரியான விளக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில், கமிஷன் விசாரித்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை தொடர்பாக சாதகமான முடிவு கருணாநிதி தரப்புக்கு கிடைக்கவில்லை என்பதும் ஆவணங்களில் இருந்து தெரிகிறது.

அறிக்கை வெளியாவதற்கு முன்பே “லீக்”

சர்க்காரியா கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அதன் முடிவுகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. அதாவது, அறிக்கை அதிகாரப்பூர்வமாக 1977 மார்ச் 2-ம் தேதி ராஜ்யசபாவின் சிறப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே அதன் முக்கிய முடிவுகள் “leak” ஆகிவிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. அவசரநிலை கால தணிக்கை அமலில் இருந்தபோதும் இந்த தகவல்கள் பரவியதால், இது அரசியல் ரீதியாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒரு முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தன.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் முக்கிய முடிவுகள் கசியவிடப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். அதாவது… ஒருபுறம் ஊழல் குற்றச்சாட்டுகள். மறுபுறம் அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டு. இதனால் சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஒரு சட்ட ஆவணமாக மட்டுமல்லாமல், தேர்தல் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கலைஞர் குற்றவாளியா? நிரபராதியா?

சர்க்காரியா கமிஷனைப் பற்றி அரசியல் மேடைகளில் இரண்டு முனைகளில் பேசப்படுகிறது. ஒரு தரப்பு,“சர்க்காரியா கமிஷன் கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தது” என்கிறது. மற்றொரு தரப்பு, “கருணாநிதி மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை” என்கிறது.

ஆனால் ஆவணங்களைப் பார்த்தால்… இரண்டுமே முழுமையான உண்மை அல்ல.உண்மை என்னவென்றால், 28 குற்றச்சாட்டுகள் விசாரணை வரம்பில் இருந்தன. அதில் 7 குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல் கட்டத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த 7-ல் 6 குற்றச்சாட்டுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிரூபிக்கப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. மீதமிருந்த 21 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடர வேண்டிய நிலை இருந்தது.

மேலும், இந்த கமிஷனை எம்.ஜி.ஆர். அமைக்கவில்லை; ஆனால் எம்.ஜி.ஆர். முன்வைத்த குற்றச்சாட்டுகள் இந்த விசாரணையின் முக்கிய பின்னணியாக இருந்தன. இதுதான் சர்க்காரியா கமிஷனின் மிக முக்கியமான வரலாற்று உண்மை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *