விம்பிள்டன் டவல்கள் சாதாரணமானவை அல்ல.
இதன் உருவாக்கத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஒரு விம்பிள்டன் டவலை வடிவமைத்து தயாரிக்கும் பணி, போட்டி தொடங்குவதற்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நிறங்கள் மற்றும் டிசைன்களை முடிவு செய்த பிறகு, ஒரு டவலை முழுமையாக உற்பத்தி செய்து முடிக்க சுமார் 7 நாட்கள் ஆகிறது.
இந்த ஆண்டுக்கான டவல்கள், விம்பிள்டனின் பாரம்பரிய பச்சை மற்றும் ஊதா நிறங்களில் (Purple and Green) நெசவு செய்யப்பட்டுள்ளன. மேலும், விம்பிள்டனின் புகழ்பெற்ற ஸ்ட்ராபெர்ரி, க்ரீம் உணவை நினைவூட்டும் வகையிலும் சிறப்பு நிறங்களில் டவல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மிகச்சிறந்த தரமான பருத்தி நூல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. இதனால், மிகவும் மென்மையாகவும், வியர்வையைத் துரிதமாக உறிஞ்சக்கூடிய வகையிலும், பல முறை துவைத்தாலும் தரம் குறையாத வகையிலும் உள்ளன.

விம்பிள்டன் விதிமுறைப்படி, போட்டிகள் முடிந்ததும் வீரர்கள் அந்த டவல்களைத் திருப்பி அளிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வீரர்கள் அதைத் திருப்பித் தருவதில்லை! ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,500 டவல்கள் வீரர்களின் பைகளுக்குள் சென்றும், ரசிகர்களுக்குப் பரிசளிக்கப்பட்டும் காணாமல் போகின்றன. வெறும் 15% டவல்கள் மட்டுமே போட்டி அமைப்பாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.
முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (Iga Swiatek), போட்டி முடிந்ததும் தனது பைகளில் இந்த டவல்களை மகிழ்ச்சியாக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரைச் செல்லமாக `விம்பிள்டன் டவல் திருடி’ (Wimbledon towel thief) என்றே அழைக்கின்றனர்.
முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) கூட, இந்த டவல்களைத் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்குவதற்காக போட்டி முடிந்ததும் எடுத்துச் செல்வதாக ஒருமுறை வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.