வியட்நாம் கோரம்! “அப்பாவ பார்க்கணும்…” முருகபிரபுவின் 8 வயது மகள் கண்ணீர்! உடைந்த சொந்தங்கள் | Vietnam heartbreaking: Palani Murugaprabhu daughter cries for her father

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

பழனி: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த முருகபிரபுவின் 8 வயது மகள் சர்விகா, அப்பா வேண்டும் என உறவினர்களிடம் அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மொபைல் நிறுவன விநியோகஸ்தர் முருகபிரபு (44) என்பவர் கடலில் மூழ்கிப் உயிரிழந்தார்.

Vietnam boat accident

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த முருகபிரபு (44) மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் பழனியில் ‘லாவா’ (Lava Mobile) மொபைல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களாகப் பணியாற்றி வந்தனர்.

இவர்களது சிறப்பான வணிகச் செயல்பாட்டிற்காக, சம்மந்தப்பட்ட மொபைல் நிறுவனம் சார்பில் இவர்களை வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்காக இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை (08.07.2026) இங்கிருந்து வியட்நாம் பயணம் சென்றனர். அங்கு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் (Phu Quoc) தீவு அருகே, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இரு வேறு படகுகளில் பிரிந்து பயணித்துள்ளனர்.

இதில் முதல் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்றபோது, அந்தப் படகு எதிர்பாராத விதமாகத் திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த முதல் படகில் பயணித்த பழனி விநியோகஸ்தர் முருகபிரபு (44) துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிப் உயிரிழந்தார். அதே நேரத்தில், மற்றொரு படகான இரண்டாவது படகில் (Boat) பயணித்த நிர்மல்குமார் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் சிக்காமல் பத்திரமாக உயிர் தப்பியுள்ளார்.

முதல் படகில் இருந்து 20 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. உயிரிழந்த முருகபிரபுவின் உடலைத் தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த முருகபிரபுவுக்கு மகாலட்சுமி (37) என்ற மனைவியும் சர்விகா (8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் முருகபிரபுவின் தாய் திலகவதியுடன் வசித்து வருகிறார்கள். சர்விகா தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். முருகபிரபு உயிரிழந்தது தெரியவந்ததும் சர்விகாவை பாதியிலேயே பள்ளியில் இருந்து அழைத்து வந்தனர்.

அவரிடம் தந்தையின் இறப்பு குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வரவர அவர்களின் அழுகையின் மூலம் தனது தந்தைக்கு ஏதோ நடந்துவிட்டது என்பதை மட்டும் அறிந்த அந்த பிஞ்சுக் குழந்தை தனது தந்தையை பார்க்க வேண்டும் என கூறி தாயிடமும் அவரது உறவினர்களிடமும் அழுது கேட்ட சம்பவம் காண்போர் நெஞ்சை கலங்கச் செய்தது. முருகபிரபு மரணம் பழனி மொபைல் டீலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *