வியட்நாம் கோர விபத்து.. பலியான 10 தமிழர்கள் உட்பட 15 பேரின் உடல் எப்போது.. சொந்த ஊர் வரும்? | Vietnam Boat Tragedy: When will the remains of 10 Tamils and rest of the 5 Indian Tourists arrive

Spread the love

International

oi-Shyamsundar I

ஹானோய்: வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பூ குவக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற அதிவேகப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். இவர்களின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தில் 10 தமிழர்கள் பலியானார்கள். 3 பேர் ஆந்திரப் பிரதேசம் மற்றும் 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vietnam Boat Tragedy

லாவா மொபைல்ஸ் ஏற்பாடு செய்த சுற்றுலா

பிரபல மொபைல் போன் நிறுவனமான ‘லாவா மொபைல்ஸ்’ மற்ற சில நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த வியட்நாம் சுற்றுலாவை ஸ்பான்சர் செய்திருந்தது. விபத்தில் சிக்கிய படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 உள்ளூர் ஊழியர்கள் என மொத்தம் 36 பேர் இருந்தனர். இவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 15 பேரில் 14 பேர் லாவா நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ள மற்ற நிறுவனத்தை சேர்ந்தவர். ஒருவர் அந்நிறுவனத்தின் ஊழியர் ஆவார்.

விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் ஜெயவேல், முருகபிரபு ஆறுமுகம், ஸ்ரீதர் சுந்தரராஜன், ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத், பாலாஜி நடேசன், வினயகுமார், ரவிசங்கர் சுகுமாரன், சந்தோஷ்குமார் சாந்திலால் ஜெயின், பாபு குப்புசாமி மற்றும் அழகுராஜன் சிவசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த விநியோகஸ்தர் ஆஷிஷ் குமார் இந்த விபத்து குறித்து ஊடகங்களிடம் பேசி உள்ளார். அதில், நாங்கள் ஜூலை 9 அன்று வியட்நாம் வந்தடைந்தோம். ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தோம். சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குப் புறப்பட்ட எங்களது படகு, கரையில் இருந்து வெறும் 300 – 400 மீட்டர் தூரம் சென்ற உடனே திடீரென கவிழ்ந்தது. நாங்கள் கரையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோதே இந்த துயரம் கண்முன்னே நடந்துவிட்டது, என்றார்.

படகில் பயணித்த நிர்மல் குமார் கூறுகையில், ஒரு பெரிய அலை எங்களைத் தாக்கியது. அதில் படகு கவிழ்ந்தது. நாங்கள் முன்பகுதியில் இருந்ததால் எப்படியோ தப்பித்து வெளியே வந்துவிட்டோம். ஆனால், பின்பகுதியில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்” எனத் தெரிவித்தார்.

முதலுதவி இல்லை, சிபிஆர் இல்லை

மீட்கப்பட்ட பயணிகள் கப்பல் நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பயணி கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் முறையான முதலுதவி வசதிகளோ அல்லது அவசரக்கால சிபிஆர் சிகிச்சை அளிக்க ஆட்களோ இல்லை.

படகில் ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லை. மீட்புக் குழுவினர் எங்களைக் காப்பாற்றினாலும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு மருத்துவர்கள் வரத் தாமதமானது. முறையான மருத்துவ வசதி சரியான நேரத்தில் கிடைக்காததே இத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணம், என வேதனையுடன் தெரிவித்தார்.

தலைவர்கள் இரங்கல் மற்றும் உடல்களை மீட்கும் பணிகள்

இந்த விபத்து குறித்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் இந்த விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரள அரசுகள் தனித்தனியே உதவி எண்களை அறிவித்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக சொந்த ஊருக்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சார்பாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த 2-3 நாட்களில் உடல்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்குத் தாயகம் திருப்புவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அதற்கான அனுமதிகளைப் பெறும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, மீட்கப்பட்ட மற்ற பயணிகள் இந்தியா திரும்புவதற்கான விமான டிக்கெட் ஏற்பாடுகளை லாவா நிறுவனம் செய்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *