Anbe Diana: “நான் இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு நன்றி" – ரம்யா ரங்கநாதன்

Spread the love

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து ‘அன்பே டயானா’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

‘குட் நைட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

அன்பே டயானா பாரி இளவழகன் - யுவராஜ்
அன்பே டயானா பாரி இளவழகன் – யுவராஜ்

இந்த நிகழ்வில் பேசிய நடிகை ரம்யா ரங்கநாதன், “முதலில் என் திறமையைக் கண்டறிந்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் வாய்ப்பளித்து, இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தச் சிறப்பான கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் பாரிக்கு பெரிய நன்றி. ‘ஜமா’ திரைப்படத்தில் உங்களின் நடிப்பைப் பார்த்து வியந்த எனக்கு, அதற்கு நேர்மாறான ‘அன்பே டயானா’ கதையை நீங்கள் கையாண்ட விதம் உங்களின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. நீங்கள் வாழ்வில் மிகப்பெரிய உயரங்களை அடைவீர்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெலி சார் எங்களை திரையில் மிக அழகாகக் காட்டியுள்ளார். இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் ‘தொடுவானத்தில்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ரோஜா மேமின் சிரிப்புக்கும் நடனத்திற்கும் நான் எப்போதுமே பெரிய ரசிகை.

வெளியில் பார்க்க ஸ்ட்ரிக்ட் ஆகத் தெரிந்தாலும், அவர் உள்ளுக்குள் மிகவும் அன்பானவர். சேத்தன் சாருடன் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறேன், அவரோடு நடித்தது ஜாலியாக இருந்தது.

அன்பே டயானா படக்குழு
அன்பே டயானா படக்குழு

‘பரிதாபங்கள்’ கோபி அண்ணாவின் மிகப்பெரிய ரசிகை நான், அவருடன் நடிக்கும் போது சிரிப்பை அடக்கிக்கொண்டு நடிப்பதுதான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. சுதர்சன் அண்ணா மற்றும் என் ஆங்கிலோ இந்தியக் குடும்பமாக நடித்த நிகிலா, இஸ்மத், அதிதி என அனைவரோடும் நடித்தது ஒரு சிறந்த அனுபவம்.

ஒரே கதாபாத்திரத்தில் கோபம், நகைச்சுவை, காதல் எனப் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதற்காக என் 100% உழைப்பைக் கொடுத்துள்ளேன், உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், இதற்கு முன்பு பெரம்பூர் பக்கம் போனதே இல்லை. இந்தப் படத்தின் மூலம் ஐ.சி.எஃப் (ICF) காலனி உள்ளிட்ட அந்தப் பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரம்பூர் மக்கள் மற்றும் அங்கு வாழும் ஆங்கிலோ இந்தியன் மக்கள் அனைவரும் மிகவும் அன்பானவர்கள், முற்போக்கானவர்கள் மற்றும் உதவும் குணம் கொண்டவர்கள்.

‘அன்பே டயானா’ என்பது அனைவரும் இரண்டு மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து தங்களின் கவலைகளை மறந்து ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக இருக்கும். நன்றி!” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *