இன்றைக்கு அவைக்கு முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இருவருமே தாமதமாகத்தான் வந்தனர். முதல்வர் மாநிலக் கல்லூரியில் ஒரு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துவிட்டு அவைக்கு வந்தார். முதல்வர் தாமதமாகத்தான் வருவார், தீர்மானங்கள் தாமதமாகத்தான் நிறைவேற்றப்படும் என்பது முன்பே தெரிந்திருந்ததால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் தாமதமாகவே அவைக்கு வந்தார்.
அவையில் பிரேமலதா பேச எழுந்தரிக்கும் போதெல்லாம் சபாநாயகரை பேரவைத் தலைவர் என அழைக்காமல், ‘ஓகே அண்ணா…சரிங்க அண்ணா…’ என பாசமலராக மாறிவிடுகிறார். மேகதாது தீர்மானத்தின் போதும் சரி, இன்று நீட் தீர்மானத்தின் போதுமேகூட அண்ணா…அண்ணா என்றுதான் அழைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பிரேமலதா…’மன்னிக்கவும் பேரவைத் தலைவரே…’ என சரி செய்து பேசிவிடுகிறார்.
இணையத்தில் அடிக்கடி ட்ரெண்ட் ஆகும் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி இன்றுதான் முதன் முதலாக அவையில் பேசினார். என்னுடைய கன்னிப் பேச்சு இதுவென கூறி ஆரம்பித்த கனிமொழி, ‘மக்கள் மனதில் அழகிய தமிழ் மகனாய்
பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் “பீஸ்ட்” மோடிற்கு சென்று விடுவார்..
பெண்களை சீண்டுபவர்களுக்கு ஒரு “வேட்டைக்காரனாகவும்”
பெண்களுக்கு ஒரு “காவலனாகவும்’ என விஜய் நடித்த படங்களின் பெயரை வைத்து கவிதையாய் பாடினார். ஒரு நிமிடத்தில் இது சட்டமன்றமா…இல்லை ஆடியோ லாஞ்ச் மேடையா எனும் சந்தேகமே வந்துவிட்டது.
இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பட்ஜெட் மீதான விவாவதமும் நடந்ததால் இன்று 7 மணி நேரத்துக்கு மேல் அவை நடந்திருந்தது. ‘சுகர் பேஷண்ட்டுய்யா…நானு’ என சில எம்.எல்.ஏக்கள் அவையிலேயே கண் அசந்துவிட்டனர்.