Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி சென்னை வந்துள்ளார். சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் நாவலூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் புதிய பயிற்சியாளர் மற்றும் டிரேட் குறித்த இறுதி முடிவுகளை எடுக்க தோனி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்கள் நடக்க உள்ளது. இதனிடையே சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளமிங் பதவி விலகினார். இதனால் சிஎஸ்கே அணி புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. மீண்டும் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரை தான் சிஎஸ்கே நிர்வாகம் பரிந்துரை பட்டியலில் வைத்திருக்கிறது.

பிளமிங் ராஜினாமா செய்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட சூழலில், சிஎஸ்கே அணி நிர்வாகம் இதுவரை புதிய பயிற்சியாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கான டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் நாவலூரில் உள்ள சிஎஸ்கே அணியின் சொந்த மைதானத்தில் வீரர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் வீரர்கள் பங்கேற்கலாம். அவர்களின் ஃபிட்னஸ் குறித்து முழுத் தகவல்களை அறியவே இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி சென்னை வந்துள்ளார். அவருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் விளம்பட படப்பிடிப்புக்காக வந்துள்ளாரா அல்லது பயிற்சி முகாமில் பங்கேற்க வந்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் சிஎஸ்கே நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தோனி உடனான ஆலோசனைக்கு பின் சிஎஸ்கே அணி பயிற்சியாளர் யார் என்ற முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரத்திலும் இறுதி முடிவை தோனியே எடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.