கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி, இறக்குமதி எக்சிம் செயல்பாடுகள் மற்றும் ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தை கேரள முதல்வர் வி.டி.சதீசன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிகுட்டி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வி.டி.சதீசன் பேசுகையில், “விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயிலாகும். இது கேரளாவின் வளர்ச்சி வரலாற்றிலேயே மிக முக்கியமான சாதனையாகும்.
மற்றொரு துறைமுகத்தையும் சார்ந்திராமல், மறுஏற்றுமதி இன்றி, ஆறு கண்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான துறைமுகங்களுக்கு நேரடியாக சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள இனி விழிஞ்ஞம் துறைமுகம் வழிவகை செய்யும். கடந்த 10 ஆண்டுகளில் விழிஞ்ஞத்தில் ரயில் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தியிருந்தால் இப்போது 100 மடங்கு நன்மை ஏற்பட்டிருக்கும். இந்த அரசு கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை செய்துவருகிறது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் இந்தியாவின் முதல் துறைமுகம் விழிஞ்ஞம் என்பது நமக்குப் பெருமைக்குரிய சாதனையாகும்.
கேரளாவிலுள்ள இரண்டு சர்வதேச துறைமுகங்கள், ஒரு கன்டெய்னர் நிலையம் மற்றும் 18 சிறு துறைமுகங்களை ஒருங்கிணைத்து மாநிலத்தை ஒரு முழுமையான துறைமுக மையமாக மாற்றுவதே “மிஷன் சமுத்ரா’ திட்டத்தின் முக்கிய இலக்காகும். மாநிலத்தின் சரக்குப் போக்குவரத்தில் 50 முதல் 60 சதவீதம் வரை கடல் வழியாக மாற்றுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும்.

கொச்சியிலிருந்து துபாய் மற்றும் கோவாவிற்கும், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கும் பயணிகள் கப்பல் சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். மாநிலத்திலுள்ள 44 நதிகள் மற்றும் காயல்களை இணைத்து பெரிய அளவிலான நதிப் படகுப் போக்குவரத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
துறைமுக வளர்ச்சியோடு தொடர்புடைய சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்புகளை விரைவுபடுத்துவதில் அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் வெளிவட்டச் சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ.3,200 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. தொழில்துறை முகமைகள் மூலம் விரைவாக நிலம் கையகப்படுத்தப்பட்டு, சரக்குப் பூங்காக்கள், கிடங்கு நிலையங்கள் மற்றும் தடையில்லா தொழில் மண்டலங்கள் தொடங்கப்படும்.
கயிறு, வாசனை திரவியங்கள் மட்டுமல்லாது கேரளாவின் தனித்துவமிக்க உணவுப் பொருட்கள் வரை இனி விழிஞ்ஞம் துறைமுகம் வழியாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ‘கேரளா பிராண்ட்’ என்ற பெயரில் நமது தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கு விழிஞ்ஞம் துறைமுகம் மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது.