கோபக்கனலில் இருந்த நரசிம்மரைத் தரிசிக்க முடியாமல் சப்த ரிஷிகள் வருந்திய சமயத்தில், நரசிம்மரின் உக்கிரத்தினைக் குறைக்கும் பொருட்டு, அமிர்தவல்லி தாயார் நரசிம்மரின் மடியில் அமர்ந்தபடி, ஒரு கண்ணால் நரசிம்மரையும், மறுகண்ணால் ரிஷிகளையும் பார்ப்பது போலக் காட்சியளித்தார்.
அதே கோலத்தில், இத்தலத்திலும் இறைவன் தாயாருடன் வீற்றிருந்து சாந்த ரூபமாக பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகின்றார். கி.பி.7-ம் நூற்றாண்டில், பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய இந்தக் கோயில்.
அதற்கு முன்பு இத்தலத்தில் நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியவர் என்பதால் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்து இந்த ஆலயத்தை எழுப்பினர்.

இங்கு தாயாருடன் நரசிம்மப் பெருமாள் அருள்பாலிக்கும் அழகோ அழகு. நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார்.
பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது.
இந்த ஆலிங்க பாவனை தரிசித்த மாத்திரத்திலேயே நமக்கு அருள்பாலிப்பது. எனவே இத்தலத்துக்கு வந்துபோனாலே பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்று சேர்வர். சண்டை சச்சரவுகள் நீங்கி இல்லறம் நல்லறமாகும்.