மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
பீட் உட்பட சில மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இப்போதே குடிநீர் பிரச்னை ஏற்பட்டு டேங்கர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த வறட்சியிலும் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்து இருக்கிறது. மாநிலம் முழுவதும் 180 விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களை ரூ.4 கோடி செலவு செய்து வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டும் ரூ.2 கோடி செலவு செய்து விவசாயிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றனர். இந்த ஆண்டு லண்டனில் நடந்த ஏ.ஐ மாநாட்டில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர் உதய் சாமந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் வறட்சி நிலவும் நேரத்தில் ரூ.5 கோடி செலவு செய்து இந்தப் பயணம் தேவையா என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ரோஹித் பவார், ஆதித்ய தாக்கரே ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அந்த மாநாட்டிற்கு மாநில தொழிற்துறை முதன்மை செயலாளர் அன்பழகன் தலைமையிலான குழு சென்றது.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது குறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “‘வெளிநாடுகளில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல், சந்தை தேவை மற்றும் விவசாய விளைபொருள் பதப்படுத்துதல் போன்ற அம்சங்களை விவசாயிகள் புரிந்துகொள்ளும் உதவும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.