விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளராக இருந்த திரு. சங்கர் ஐ.ஏ.எஸ். அவர்கள், தொல்லியல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது.
ஆனால், இப்போது வரை வேளாண் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் புதிய செயலாளர் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது, உழவர் பெருமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்ட வேளாண் துறை போன்ற ஒரு முக்கியத் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் செயலாளர்கூட இல்லாமல் இருப்பதை என்ன காரணம் சொல்லி இவர்களால் நியாயப்படுத்த முடியும்?
பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், வேளாண்மைத் துறைக்கு நிலையான நிர்வாகத் தலைமையும், துரிதமான ஒருங்கிணைப்பும் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக, விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய முடிவுகள் தாமதமின்றி எடுக்கப்படுவதற்கும், மாவட்ட அளவிலான பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இது அவசியமானது.
இதனைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய, துறை அமைச்சரும் முதலமைச்சரும் “வேறு வேலைகளில்’தான் மும்முரம் காட்டுகின்றனர். த.வெ.க. ஆட்சிக்கு வந்ததுமே, பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தார்கள். இயற்கையால் குறுவை பொய்த்து, த.வெ.க. அரசின் சிந்தனையற்ற செயல்பாட்டால் சம்பா சாகுபடியும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது.