சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 101 நாட்கள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அவருக்கு வயிற்றில் புற்றுநோய் வந்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இது குறித்து சஞ்சய் ராவுத் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில்,”‘சிறையில் இருந்த காலத்துக்கும், புற்று நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனது உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பதைச் சரிபார்க்க, நச்சுத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தார்.
தற்போதைய அரசாங்கம் மிகவும் கொடூரமானது. அதை எதிர்ப்பவர்களுக்கு எதிராக எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். சிறையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு எதுவும் நடக்கலாம் என்று ராகுல் காந்தியும் சந்தேகப்பட்டார்.
நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது. ராகுல் காந்தி உணவில் விஷம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நச்சுத்தன்மை பரிசோதனையை மேற்கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். சிறையில் அடைக்கப்படும் அரசியல் தலைவர்களுக்கு உடல்நலப்பிரச்னை ஏற்படுகிறது.
சிறையில் உள்ள உணவு அல்லது தண்ணீரை அதிகாரிகள் சேதப்படுத்தலாம். அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் எங்களைப் போன்றவர்களுக்கு சிறையில் அதற்கான (அது நடக்கலாம்) சாத்தியம் உள்ளது. அத்தகைய சூழ்நிலை ஏற்படலாம் என்று ராகுல் காந்தி எச்சரித்தார்” என்று தெரிவித்தார்