Tamilnadu
oi-Vishnupriya R
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான முழு ஆதாரங்களையும் போலீஸார் திரட்டி தீவிரம் காட்டி வருகிறார்கள். எம்எல்ஏவிடம் விசாரணை நடத்த போலீஸார் சென்ற போது எம்எல்ஏ, தனது வீட்டு அறையை விட்டு வெளியே வரவில்லை என சொல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, அந்த தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்சியரின் கணவரான ஷேக் அப்துல் ரகுமான் விழுப்புரம் சரக டிஐஐி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆட்சியருக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மது போதையில் அவரது வீட்டிற்கு சென்று தொல்லை கொடுத்ததாகவும் கடந்த 8 ஆம் தேதி சமூகவலைதளங்களில் தகவல் வைரலானது.
திமுக எம்பி கனிமொழி
இந்த விஷயத்தை முதலில் வெளியே கொண்டு வந்தவர் திமுக எம்பி கனிமொழிதான். இதைத் தொடர்ந்து அருள் விக்னேஷின் செயலுக்கு திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அவரை கைது செய்து எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அருள் விக்னேஷ் மறுப்பு
எனினும் அருள் விக்னேஷ் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். அதே நேரம் எம்எல்ஏ அருள்விக்னேஷ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆட்சியர் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
தேசிய மகளிர் ஆணையம்
இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கடந்த 15 ஆம் தேதி தாமாக முன் வந்து கையில் எடுத்தது. நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை டிஜிபி நடத்த வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அருள் விக்னேஷ் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை
அந்த மனு மீது நேற்று முன் தினம் விசாரணை நடந்தது. இநத் வழக்கை நீதிபதி வி.லட்சுமிநாராயணன், விசாரித்தார். அப்போது தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியரின் கருத்துகளை கேட்டு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு நேற்று முன் தினம் மாலை மாவட்ட எஸ்பி ஷக்னாஸ் நேரில் சென்றிருந்தார். எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய அவர், மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகாரை எழுத்துப்பூர்வமாக பெற்றிருந்தார்.
எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
அந்த புகாரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று முன் தினம் இரவு கள்ளக்குறித்து அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் மீது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அணுகுமுறை, பாலியல் நோக்கத்துடன் அத்துமீறி நடந்து கொள்ளுதல், இரட்டை அர்த்தத்தில் பேசுதல், பாலியல் சாயல் கொண்ட ஆபாசமான கருத்துகளை தெரிவித்தல், பெண்ணின் விருப்பம் இல்லாமல் தொடர்ந்து தொந்தரவு செய்தல் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ்வரன், கள்ளக்குறிச்சி தனிப்படை காவலர் சரவணன் ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அருள் விக்னேஷ் வீட்டிற்கு சென்றனர்.
அறையை விட்டு வெளியே வராத அருள் விக்னேஷ்
தொடர்ந்து அவர்கள் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் அருள் விக்னேஷ், வீட்டு மாடியில் இருந்த தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. காத்திருந்து காத்திருந்து மதியம் 12 மணியளவில் போலீஸார் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆட்சியர் வீடு, அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஆட்சியரின் உதவியாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் நேற்று மாலை 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் எஸ்பி ஷக்னாஸ் 3 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தார். இதையடுத்து அவர்கள் 7 மணிக்கு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கைது செய்ய தீவிரம்
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அருள் விக்னேஷ் எம்எல்ஏவை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீஸார் துரிதப்படுத்தியுள்ளனராம். அவருக்கு எதிராக முழு ஆதாரங்களையும் திரட்டி வருகிறார்கள்.

