வெனிசுலா: `நான் உயிரோடு இருப்பதை என் மனைவியிடம் சொல்லாதீங்க' – இடிபாடுகளில் சிக்கியவரின் கோரிக்கை

Spread the love

கடந்த ஜூன் 24 அன்று வெனிசுலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் வடமேற்குப் பகுதியை உலுக்கின. இந்த பயங்கர பேரிடரில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 11,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில், லா குவைரா மாநிலம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தது.

சிலி நாட்டு தீயணைப்புப் படையினரின் ஒருங்கிணைப்பில், அமெரிக்கா, போர்ச்சுகல், மெக்சிகோ, கோஸ்டாரிகா, எல் சால்வடார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர்.

வெனிசுலா நிலநடுக்கம்
வெனிசுலா நிலநடுக்கம்

பெரும் உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என வெனிசுலா சந்தித்த சோகத்திற்கு மத்தியிலும், ஒரு கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 43 வயது பாதுகாப்பு காவலர் ஒருவர், 8 நாட்களுக்குப் பிறகு நேற்று அதிகாலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த மீட்பு நடவடிக்கை, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு பெரும் நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது.

ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் என்ற அந்தப் பாதுகாவலர், லா குவைரா கடலோரப் பகுதியில் உள்ள ‘கேலரியாஸ் பிளாயா கிராண்டே’ வணிக வளாகத்தின் அடித்தளத்தில் ஜூன் 24 முதல் சிக்கியிருந்தார். நிலநடுக்கத்திற்குப் பின் தொடர்ந்து பெய்த கனமழை, நில அதிர்வுகள் மற்றும் நிலையற்ற கட்டிட அமைப்பு போன்ற பலத்த சவால்கள் மீட்புப் பணியாளர்களுக்கு இருந்தது.

பொதுவாக இதுபோன்ற பேரிடர்களில் 48 முதல் 72 மணி நேரத்திற்குள் மட்டுமே மனிதர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. ஆனால், புளோரஸ் சிக்கியிருந்த கான்கிரீட் இடிபாடுகளுக்கு இடையே சிறிய துளை மூலம் உணவும் தண்ணீரும் வழங்கி, மீட்புக்குழுவினர் அவரை 8 நாட்கள் வரை உயிருடன் வைத்திருக்க முடிந்தது ஒரு சிறிய அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.

வெனிசுலா நிலநடுக்கம்
வெனிசுலா நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் போது அவர் இருந்த சிறிய பாதுகாப்பு அறை கான்கிரீட் இடிபாடுகளிலிருந்து அவரைக் காப்பாற்றி, சுவாசிப்பதற்கான காற்றோட்டம் உள்ள இடமாக மாறியிருக்கிறது. சர்வதேச மீட்புக் குழுவினர் 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, சுரங்கம் தோண்டி அவரை பத்திரமாக மீட்டனர்.

டெலஸ்கோபிக் கேமராக்கள் மூலம் புளோரஸை கண்காணித்து, குழாய் மூலம் திரவ உணவுகளை வழங்கி வந்தனர். மேலும், சிலி நாட்டைச் சேர்ந்த மரியா பாஸ் காம்போஸ் என்ற மூத்த தீயணைப்பு வீராங்கனை, புளோரஸிடம் தொடர்ந்து பேசி, கடைசி நேர இக்கட்டான சூழலில் அவரது பயத்தைப் போக்கி தைரியம் அளித்துள்ளார்.

மீட்கப்பட்ட புளோரஸ் ஆக்ஸிஜன் முகமூடி அணிவிக்கப்பட்டு, ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த பல்வேறு நாடுகளின் மீட்புக் குழுவினர் உலக நாடுகளின் கொடிகளை அசைத்து, கைதட்டி தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். கோஸ்டாரிகா மற்றும் சிலி நாட்டு மீட்புப் படையினர் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது நிம்மதியை வெளிப்படுத்தினர்.

“நாங்கள் அவரை மீட்பதற்கு முன்பு, ஒருவேளை தான் உயிர் பிழைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில், தான் உயிருடன் இருக்கும் விஷயத்தை தனது மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரை அங்கேயே விட்டுவிட்டு வர எங்களுக்கு மனமில்லை” என்று கோஸ்டாரிகா செஞ்சிலுவைச் சங்க மீட்பாளர் மின்யார் கோலாடோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வெனிசுலா நிலநடுக்கம்
வெனிசுலா நிலநடுக்கம்

கடந்த சில நாட்களாக அவநம்பிக்கையில் இருந்த அவரது மனைவி குஸ்பிமார் கோன்சலஸ், தனது கணவர் உயிருடன் இருக்கும் செய்தி கேட்டு நிம்மதி அடைந்துள்ளார். “அவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தபோது, இருண்ட காலகட்டத்தில் ஒரு ஒளிக் கீற்றைக் கண்டது போல இருந்தது” என்று அவர் கூறினார். இத்தம்பதியருக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பேரிடர் மேலாண்மையில் வெனிசுலா அரசு சரியாகச் செயல்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், இந்த மீட்புப் பணியை சமூக ஊடகங்களில் பாராட்டி, “மனிதநேயத்தின் மகத்தான வெற்றி இது. ஒரு உயிரைக் காக்க ஒட்டுமொத்த உலகமும் ஒன்று திரண்டதற்கு நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *