வெப்ப அலைக்கு பிறகு வானமே தீப்பொறி.. சில மணி நேரத்தில் 3 லட்சம் மின்னல்கள்.. மிரண்ட ஆய்வாளர்கள் | 300,000 Lightning Strikes in 24 Hours: How Europe Heatwave Triggered a Massive Thunderstorm

Spread the love

International

-Vigneshkumar

ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டில் வெறும் சில மணி நேரத்தில் 3 லட்சம் மின்னல்கள் தாக்கியுள்ளன. இரவு முழுக்க மின்னல்கள் தாக்கியதில் ஒட்டுமொத்த ஆம்ஸ்டர்டாம் நகரமும் வானத்தில் இருந்து ஒளி பெறுவது போல இருந்ததாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இப்படிக் குறுகிய நேரத்தில் அதிகளவில் மின்னல்கள் தாக்கியது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரம் கடந்த ஜூன் 28ம் தேதி ஒரு அசாதாரணமான சம்பவம் நடந்தது. அதாவது அன்றைய தினம் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. அப்போது 24 மணி நேரத்திற்குள் 3 லட்சத்திற்கும் அதிகமான மின்னல்கள் தாக்கியுள்ளன.

Europe Heatwave heat weather

அடித்து தூக்கிய மின்னல்

குறிப்பாகப் புயல் மேகங்கள் உச்சத்தில் இருந்தபோது, நெதர்லாந்து மற்றும் வட ஜெர்மனியில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 30,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகின. அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 17 மின்னல்கள் தாக்கியுள்ளன. இது ஒரு சாதாரண மழை நிகழ்வு அல்ல.. மாறாகப் பல நாட்களாக வாட்டி வதைத்த கடுமையான வெப்ப அலையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு சக்திவாய்ந்த மழையாகும்.

வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த காற்று மிக வேகமாக மேல்நோக்கிச் சென்று, அங்குள்ள குளிர்ந்த காற்றுடன் கலக்கும்போது புயல்கள் உருவாகின்றன. இது மின்னல், இடி, பலத்த மழை மற்றும் சில நேரங்களில் ஆலங்கட்டி மழை, பலத்த காற்றை உருவாக்கும் பிரம்மாண்டமான மேகங்களை ஏற்படுத்துகிறது. நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கடுமையான புயல்கள் அடிக்கடி ஏற்படுவதில்லை. இருப்பினும், தீவிரமான வெப்ப அலையைத் தொடர்ந்து இதுபோன்ற அரிதான சம்பவங்கள் நடக்கின்றன.

வெப்ப அலை

இந்த புயலுக்கு முன்னதாக தான், ஐரோப்பா முழுவதையும் வெப்ப அலை கொடூரமாகப் பதிவானது. அதீத வெப்பம் காரணமாக நெதர்லாந்து நாட்டில் ‘ரெட் அலர்ட்’ வெப்ப எச்சரிக்கையை விடுக்கப்பட்டு இருந்தது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பம் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.. சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸை நெருங்கியது.

இந்தளவுக்குக் கடுமையான வெப்பம் நிலவி வந்தபோது தான் திடீரென குளிர்ந்த காற்று உள்ளே நுழைந்துள்ளது. அது வளிமண்டலத்தில் இருந்த வெப்பமான, ஈரப்பதமான காற்றுடன் மோதி கடுமையான இடிமின்னலை உருவாக்கியது. இதையடுத்து நெதர்லாந்து வானிலை ஆய்வு நிறுவனம் மோசமான வானிலைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையை விடுத்தது.

மோசமான பாதிப்பு

இந்த அதிதீவிரமான புயல் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மின்னல் தாக்கியதில் நாட்டின் வடக்கே உள்ள குரோனிங்கன் முதல் உட்ரெக்ட் மற்றும் ஆம்ஸ்டர்டாம் வரை பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. மேலும், நாட்டின் பல பகுதிகளில் கோல்ஃப் பந்து சைஸில், அதாவது சுமார் 5 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட ஆலங்கட்டி மழையும் பெய்தது. பல மணி நேரம் நீடித்த இந்த மின்னல்களை வானமே ஒளிர்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன

இந்த அசாதாரண வானிலை மாற்றத்திற்குக் காலநிலை மாற்றமே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். வெப்பமான காற்று அதிக ஈரப்பதத்தை எதிர்கொள்ளும்போது இது போன்ற தீவிரமான மழை கொட்டுகிறது. புவி வெப்ப மயமாதலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *