எளிதாக, எல்லோராலும் எப்போதும் தயாரித்து அருந்தக்கூடிய பானம் எலுமிச்சை ஜூஸ். இதிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். உணவருந்திய பிறகு எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் இரும்புச்சத்து உட்கிரகிப்பு மேம்படும்.
இந்தச் சீசனில் கிடைக்கும் நுங்கை, கோடையின் கொடை என்றே சொல்லலாம். இதில் நிறைய நீர்ச்சத்தும், பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுச்சத்துகளும் அபரிமிதமாக உள்ளன.
கோடையில் தினமும் நுங்கு சாப்பிடுவதன் மூலம் உடலின் நீர்த்தேவை பூர்த்தியாவதோடு, பசி உணர்வும் கட்டுப்படும். உடலின் திரவ -எலெக்ட்ரோலைட் விகிதமும் சரியாக நிர்வகிக்கப்படும்.
நூல்கோல், சவ்சவ், முள்ளங்கி மற்றும் சுரைக்காய் ஆகிய இந்த நான்கு காய்கறிகளுமே குறைந்த கலோரிகளும் அதிக நார்ச்சத்தும் கொண்டவை என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இவை மிகச்சிறந்த தேர்வாகும். இதில் நூல்கோலில் உள்ள வைட்டமின் சி, இதயநோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதுடன், அதிலுள்ள பொட்டாசியம் செரிமானத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. சவ்சவ் மற்றும் முள்ளங்கி ஆகிய காய்கள் நீர்ச்சத்து நிறைந்தவை.
குறிப்பாக, சவ்சவ்வில் உள்ள ஃபோலேட் சத்து கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. முள்ளங்கி, நீர் வறட்சியைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இறுதியாக, 95% நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய், கோடைக்கால நீரிழப்பை ஈடுசெய்வதுடன் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
இவை அனைத்தையும் கூட்டு, சாம்பார் அல்லது பொரியலாக அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு நலம் பயக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.