வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு | Wall Street Surges: US Market Capitalization Jumps $1 Trillion in 12 Minutes on US Iran deal

Spread the love

International

oi-Vigneshkumar

வாஷிங்டன்: அமெரிக்கப் பங்குச்சந்தை இன்று தாறுமாறாக உயர்ந்தது. ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த தகவல் வந்த உடனேயே அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்தது. குறிப்பாகக் காலை வர்த்தகம் ஆரம்பித்த போது வெறும் 12 நிமிடங்களில் அமெரிக்கப் பங்குச்சந்தை 1 டிரில்லியன் டாலர் உயர்ந்தது. அதாவது ரூ.94.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது.

மத்திய கிழக்குப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையான வால் ஸ்ட்ரீட் பெரும் ஏற்றத்தைச் சந்தித்தது. நாஸ்டாக் 3% உயர்ந்த நிலையில், டவ் ஜோன்ஸ் புதிய சாதனை உச்சத்தைத் தொட்டது. ஹார்முஸ் மீண்டும் திறக்கப்படுவது, எண்ணெய் விலையைக் கணிசமாகக் குறைத்து, பணவீக்க அச்சத்தைத் தணித்தது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன.

US Iran deal US Iran US Market Capitalization

12 நிமிடங்களில்

குறிப்பாக வர்த்தகம் தொடங்கிய முதல் 12 நிமிடங்களிலேயே அமெரிக்கப் பங்குச் சந்தை சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பு உயர்வைப் பதிவு செய்தது. அதாவது இந்திய மதிப்பில் இது 94.5 லட்சம் கோடி ரூபாயாகும்.

அமெரிக்கா ஈரான் இடையேயான ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை முழுமையாகக் கையெழுத்தாக உள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் இஸ்ரேல்-லெபனான் மோதல் போன்ற முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்றாலும், இது தற்காலிகமாகப் பதற்றத்தைத் தணித்துள்ளது. இதன் எதிரொலியாக அமெரிக்கக் கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் 4.9% வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்தளவுக்குச் சரிவது இதுவே முதல்முறை. இதனால் பல்வேறு நிறுவனங்களும் பெரியளவில் லாபமடைந்தன.

மீண்டும் அதிகரித்த முதலீடு

இது தொடர்பாக செட்டெரா இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட்டின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜீன் கோல்ட்மேன் கூறுகையில், “எண்ணெய் விலை பெரியளவில் குறைந்துள்ளதால் சந்தை உயர்ந்துள்ளது. அமெரிக்க ஈரான் ஒப்பந்தம் பணவீக்க பயத்தை நீக்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பங்குகள் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளனர்” என்றார்,

அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தைகளுமே தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளன. டவ் ஜோன்ஸ் 468.77 புள்ளிகள் (0.92%) உயர்ந்து 51,671.03-ஐ எட்டிய நிலையில், எஸ்&பி 500 122.83 புள்ளிகள் (1.65%) உயர்ந்து 7,554.29ஆகவும் நாஸ்டாக் 795.10 புள்ளிகள் (3.07%) பாய்ந்து 26,683.94ஆகவும் வர்த்தகமானது.

ஹார்முஸ்

ஹார்முஸில் திறக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் சீரடையும். இதனால் விலைவாசி கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தாமல் நிலையாக வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளைய தினம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவை அறிவிக்க உள்ள நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என தெரிகிறது. இது எல்லாம் சேர்த்துத் தான் அமெரிக்கப் பங்குச்சந்தையை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

எண்ணெய் பங்குகள்

அதேநேரம் எல்லா பங்குகளும் உயர்ந்தது எனச் சொல்ல முடியாது. தொழில்நுட்பத் துறை 3.4% உயர்ந்த நிலையில், எண்ணெய் துறை 3.6% சரிவை சந்தித்தது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்க ஈரான் ஒப்பந்தம் உருவாக்கிய நிம்மதி அலையும், எண்ணெய் விலை சரிவும் சந்தையைப் புத்துயிர் பெறச் செய்துள்ளன. பெடரல் ரிசர்வ் நாளை எடுக்கும் முடிவே எதிர்காலத்தில் மார்கெட் என்னவாகும் என்பதை தீர்மானிக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *