ஒரு நொடி சாகசம், அடுத்த நொடி மரணம் எனப் பிரேசிலின் பாலத்தில் அரங்கேறிய விபரீதம் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்திருக்கிறது. சா பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா நகருக்கு அருகில், “எலும்புக்கூடு பாலம்” என்ற ஆபத்தான இடத்தில் வார இறுதியைக் கொண்டாட வந்த மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற 21 வயது மாணவிக்கு, அதுவே அவரது கடைசிப் பயணமாக மாறியுள்ளது.
பங்கி ஜம்பிங் விளையாடத் தயாரான அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு கயிறு ஏதும் மாட்டாமல், அங்குள்ள ஊழியர்கள் 130 அடி உயரத்திலிருந்து அப்படியே கீழே தள்ளிவிட்ட அதிரவைக்கும் அலட்சியம் நெஞ்சை உலுக்கும் கொடூரமாக அரங்கேறியுள்ளது.
இந்த விபத்து நிகழ்ந்த உடனே, அந்தப் பகுதியில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த ராய்சா டயஸ் என்ற செவிலியர், சேறும் சகதியுமாக இருந்த செங்குத்தான மலைப்பாதை என எதையும் பொருட்படுத்தாமல், அவரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கயிற்றின் உதவியோடு கீழே இறங்கிச் சென்றுள்ளார்.
நூற்று முப்பது அடி உயரத்திலிருந்து மிகக் கொடூரமாகக் கீழே விழுந்த பிறகும், அந்த மாணவி சில நிமிடங்கள் உயிருடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மரியாவிடம் பேசிய செவிலியர், “என் ஷிஃப்ட்டில் யாரும் இறக்க மாட்டார்கள், நீ பிழைத்துவிடுவாய்” என்று தைரியம் கூறி முதலுதவி வழங்கி அவரைக் காப்பாற்றத் தீவிரமாகப் போராடியுள்ளார்.