Business
oi-Vigneshkumar
மும்பை: இந்தியாவில் இருக்கும் முக்கிய நகைக்கடைகளில் ஒன்றான கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குச்சந்தைகளில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் 40% வரை உயர்ந்துள்ளது. இது இவ்வளவு தூரம் உயர என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தனி மவுசு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே தங்கம் நகைகளை விற்கும் பெரும்பாலான நிறுவனங்கள் எப்போதுமே லாபத்தில் இருக்கும். அப்படி சமீப காலமாக பங்குச்சந்தையில் சிறப்பாக இருக்கும் ஒரு நிறுவனம் தான் கல்யாண் ஜுவல்லர்ஸ்.

கல்யாண் ஜுவல்லர்ஸ்
கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஏறுமுகத்திலேயே வர்த்தகமானது.. இன்றைய தினம் மும்பை பங்குச்சந்தையில் 4.53% வரை உயர்ந்து கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் ரூ.497.85 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகும் தொடர்ந்து உயர்ந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் மும்பை பங்குச்சந்தையில் ரூ.510ல் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் சுமார் 40.27 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 4 நாட்களுக்கு முன்பு அதன் பங்கு ரூ.360 என்ற ரேஞ்சில் இருந்தது. இப்போது அது ரூ.500ஐ கடந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.41 சதவீதம் சரிந்த நிலையில், அதற்கு நேர்மாறாக கல்யாண் ஜுவல்லர்ஸ் ஏறி அடித்து வருகிறது. இப்போது பங்குச்சந்தை பலவீனமாக இருந்தபோதும், கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
காரணம்
கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தாண்டின் முதல் காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். அது குறித்து வரும் பாசிட்டி்வ தகவல்களும் சேர்ந்து கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகளை உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளன. குறிப்பாக சர்வதேச முதலீட்டு நிறுவனம் சிடி, கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குக்கு ரூ.750 வரை போகலாம் என சொல்கிறது. 2028 மார்ச் மாதத்திற்கான ஒருங்கிணைந்த வருவாய் கணிப்பின் இந்த கணிப்பை சிடி கொடுத்துள்ளது. நாட்டின் மற்றொரு முக்கிய தங்க நகை நிறுவனமான டைட்டனின் வேல்யூ உடன் ஒப்பிடும்போது இது சுமார் 25% குறைவான வேல்யூவில் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு நடுவே அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்திருப்பதும் தங்கத்தின் மீதான முதலீட்டாளர் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழலில் முதலீட்டாளர்கள் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேடி வருவது வழக்கம். இதுபோன்ற காலங்களில் தங்கம் சார்ந்து இருக்கும் அனைத்தின் விலையும் உயரவே செய்யும். அதன்படியே நகைக்கடைகளும் உயர்கிறது.
வருவாய் வளர்ச்சி
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் என்பது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா மற்றும் வளைகுடாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதன் வருவாய் 38 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது. திருமண சீசனில் அதன் விற்பனை 28 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சூழல்களால் தங்க இறக்குமதிக்கு கெடுபிடி இருக்கும் சூழலில், கடந்த மே மாதம் கல்யாண் ஜுவல்லர்ஸ் தங்க மறுசுழற்சி திட்டத்தை அறிவித்திருந்தது. அந்த திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்த காலாண்டு வருவாயில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் பங்கு 46 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஜூன் மாதம் இது 55 சதவீதத்தையும் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
வெளிநாடுகள்
இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு கல்யாண் ஜுவல்லர்ஸ் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அதன் சர்வதேச வருவாய் சுமார் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு சந்தையில் பதற்றம் இருந்தபோதும், அங்கு வருவாய் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்லாவற்றையும் விட கல்யாண் ஜுவல்லர்ஸின் ஆன்லைன் நகை விற்பனை தளத்தில் வருவாய் 112 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. ஒரு பங்கின் கடந்த கால வளர்ச்சி, எதிர்காலத்திலும் அதேபோல் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

