‘அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி தடவ அஞ்சு பைசாவ திருடுனா…’ இந்த புகழ்பெற்ற டயலாக் ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்றது. எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். நைலான் கயிறு, கனவு தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம், ப்ரியா, காயத்ரி உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதியுள்ளார். அவரின் ‘சுஜாதாட்ஸ், கற்றதும் பெற்றதும்’ விகடனில் வெளிவந்த புகழ்பெற்ற தொடர்கள்.
திரைத்துறையில் இவரின் பங்கு அளப்பரியது. ‘பம்பாய், ரோஜா, இந்தியன், அந்நியன், சிவாஜி.. இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி அந்த படங்கள் இன்றுவரை கொண்டாடும் வகையில் வசனங்களை எழுதியிருப்பார். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் Electronics Engineer ஆக பணிபுரிந்த போது வாக்குப்பதிவு இயந்திர (EVM) வடிவமைப்பில் முக்கிய பங்காற்றினார். அரசியல், திரைப்படம், பத்திரிகைத் துறை அனைத்திலும் சாதனை படைத்தார். இவை அனைத்திலும் ‘நான்’ என்ற சுஜாதா அவர்கள் மிக மிக உயர்ந்து நிற்கிறார்.

1983 ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை மறக்க முடியுமா. அந்த ஆண்டில் தான் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது… அதுவும் வெல்ல முடியாத அணியாக இருந்த, கிளைவ் லாய்ட், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற பல ஜாம்பவான்கள் நிறைந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அதற்கு காரணம் கபில்தேவ் அவர்களின் திறமையான வழிநடத்தல்.
ஜிம்பாப்வே நாட்டுக்கு எதிராக நடந்த போட்டியில் மிக மிக மோசமாக நிலையை நோக்கி போய்க்கொண்டு இருந்த அணியை தனி ஒருவராக அதிரடியாக ஆடி 175 (அவுட் ஆகாமல்) ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அந்த ஆட்டம் தான் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்க காரணமானது. கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ‘நான்’ இதுதான். தனி ஒரு மனிதனாக நின்று சாதித்தார்.
‘நான்’ என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்’
-சூரியகாந்தி படத்தில் கவியரசர் இப்படி பாடியுள்ளார். கணவன் மனைவி என்ற இருவர் ஒன்றாக இணைந்தால் அங்கு ‘நான்’ என்பது மட்டுமே இருக்கும் என்கிறார். ‘நாம்’ என்பது ‘நான்’ என்ற வார்த்தைக்குள் இணைந்து விடுகிறது. காதல், அன்பு, பாசம், நேசம் நிறைந்த இல்வாழ்க்கை வெற்றி அடைகிறது. வெற்றி பெற்றது ‘நான்’ தான்.
ஒன்றுக்குள் இன்னொன்று இணைந்து கிடைக்கும் வெற்றி ‘நான்’ என்ற வார்த்தைக்குள் அடங்கிவிடும். தோப்பு என்ற ஒரு வார்த்தைக்குள் எத்தனையோ மரங்கள் அடங்கி இருக்கும். அவைகள் பலவிதமான பலன்களை மனிதனுக்கு தருகின்றன.
‘நான்’ என்பது வெறும் ‘நான்’ ஆக ஒருமையாக இருந்தால் அங்கு அகம்பாவம் இருக்கும். அந்த ‘நான்’ பன்மையாக இருந்தால்…அதற்குள் நிறைய நல்ல உள்ளங்கள் இணைந்திருந்தால்.. வெற்றி தேடி வரும்.
” ‘நான்’ ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்..”
-என்ற வாலியின் வரிகள்நிஜமானது அனைவருக்கும் தெரிந்ததே.
வெற்றி பெற்றவன் ‘நான்’ தான்.. காலம் சொன்னது. இதை உறுதி செய்ய எந்த நீதிமன்றத்தையும் நாடிச் செல்ல வேண்டியதில்லை.