“வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்” – காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது? | bengaluru girlfriend set fire to her lover got arrested

Spread the love

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித்து வந்தார்.

ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீப காலமாக பிரேர்னா தனக்கு காதலன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நினைத்தார். அதோடு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று பிரேர்னா நினைத்தார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து பிரேர்னா கிரணைத் தனது வீட்டிற்கு அழைத்தார். வீட்டிற்கு வந்த கிரணுடன் பிரேர்னா பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்த சேர் ஒன்றில் அமரும்படி பிரேர்னா தெரிவித்தார்.

உடனே கிரண் அந்தச் சேரில் அமர்ந்தார். இதையடுத்து கிரணை சேரோடு சேர்த்து பிரேர்னா கயிற்றால் கட்டினார். இதனைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். கயிற்றால் கட்டுவதற்கு கிரண் எதிர்ப்பு தெரிவித்தபோது, வெளிநாடுகளைப் போன்று வித்தியாசமான முறையில் காதலைச் சொல்லப்போவதாக பிரேர்னா தெரிவித்தார்.

அதனைக் கண்மூடித்தனமாக கிரண் நம்பினார். பிரேர்னா தன்னிடம் காதலைச் சொல்வார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த கிரணுக்கு பிரேர்னா செய்த காரியம் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.

பிரேர்னா வீட்டில் இருந்த ஏதோ ஒரு திரவ எரிபொருளை எடுத்து வந்து கிரண் மீது ஊற்றினார். அதனைத் தொடர்ந்து கிரணுக்குத் தீவைத்துவிட்டார். கயிற்றால் கட்டி இருந்ததால் கிரணால் தப்பிக்க முடியவில்லை. கிரண் உயிரிழப்பதை பிரேர்னா பார்த்துக்கொண்டிருந்ததோடு, அதனை வீடியோவும் எடுத்துள்ளார்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரேர்னாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துணை போலீஸ் கமிஷனர் நாகேஷ் இது குறித்து கூறுகையில், “‘இருவரும் ஒரு ஆண்டாக நட்பில் இருந்துள்ளனர். பிரேர்னா தன்னை கிரண் புறக்கணிப்பதாக நினைத்தார். எனவேதான் அவரைத் தீவைத்து எரித்து கொன்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

பிரேர்னாவிடம் விசாரித்தபோது, தீப்பிடித்தபோது தான் பாத்ரூம்பில் இருந்ததாக பிரேர்னா தெரிவித்தார். ஆனால் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *