Business
oi-Prasanna Venkatesh
நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு பதிவான நிலையில், அதையே பெரிய வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளது டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம். மூன்று மாதங்களுக்குக் குறைவான காலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான AC விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வோல்டாஸ் பங்கு ஒரே நாளில் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம், இந்த நிதியாண்டின் கோடை காலத்தின் முதல் 81 நாட்களில் சுமார் 10 லட்சம் ஏர் கண்டிஷனர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 12,345 ஏசிக்கள் விற்பனையாகியுள்ளன.

வோல்டாஸ் தனது தயாரிப்புகளை பிரீமியம், மிட்-ரேஞ்ச் மற்றும் வேல்யூ என்று தெளிவாகப் பிரித்து, அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து விலைப் பிரிவுகளுக்கான தயாரிப்புகளை இந்த கோடை காலத்தில் அறிமுகப்படுத்தியது. இதனால், ஆடம்பர பிரிவு முதல் குறைந்த விலைப் பிரிவு வரை அனைத்து பிரிவு வாடிக்கையாளர்களையும் ஈர்த்து அதிகளவிலான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.
டாடா குழுமத்தின் மீதான நம்பிக்கை மற்றும் பல ஆண்டுகளாக இந்திய மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்ற வோல்டாஸ் பிராண்ட் மதிப்பு ஆகியவை இந்த அதிரடியாக விற்பனைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதேவேளையில் இந்த கோடை கால விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், உற்பத்தி முதல் விநியோகம் வரையில் மூன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால் பெரும் வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.
பங்கு விலை உயர்வு
டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம் இந்த விற்பனை தகவலை நேற்று பங்குச்சந்தையில் சமர்ப்பித்த நிவையில், இன்று வோல்டாஸ் பங்கு வாரத்தின் முதல் வர்த்தக நாலில் 1,384-இல் தொடங்கி அதிகபட்சமாக 1,412 ரூபாய் வரை உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் 5% உயர்வும், ஒரு மாதத்தில் 10% உயர்வும் பதிவு செய்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 78% வரை வருமானம் அளித்துள்ள வோல்டாஸ் பங்கு, ஐந்து ஆண்டுகளில் 37% வரை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ஏர் கண்டிஷனர் சந்தையில் வோல்டாஸ் தனது முன்னணி நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
கோடை காலத்தில் ஏசி தேவை அதிகரித்துள்ள நிலையில், வோல்டாஸின் இந்த சாதனை, நிறுவனத்தின் வலுவான சந்தை நிலை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ஆனால் அடுத்த காலாண்டுகளில் வோல்டாஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இதேபோல் இருக்குமா என்றால் இல்லை என்பது தான் உண்மையான பதில்.
ஒவ்வொரு வருடத்தின் கோடை காலத்திலும் மக்கள் மத்தியில் ஏசிக்கான டிமாண்ட் அதிகரித்து வருவதே இக்காலக்கட்டத்தில் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்தது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் ஏசி விற்பனை பார்க்கும் போது ஏசி தற்போது ஆடம்பர பொருட்கள் பிரிவில் இருந்து அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளதை காட்டுகிறது.