வெளுத்து வாங்கப் போகும் கனமழை…எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை அலெர்ட்! – Kumudam

Spread the love

தென்னிந்திய தீபகற்பப் பகுதிகளில் வடகிழக்கு திசை காற்று வீசத் தொடங்கியுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, தெற்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு கடலோர தமிழ்நாட்டில் பகுதிகளில் இருந்து மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் இதே நிலை நீடிக்கலாம். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற பகுதிகளில் மிதமான மழை

தமிழ்நாட்டில் ஏனைய பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை தொடர்பான வானிலை அறிவிப்புகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *