தங்கத்திற்கு எப்போதுமே நமது குடும்பங்களில் தனி இடம் உண்டு. ஆனால், வெள்ளியை அவ்வளவாகக் கண்டுக்கொள்ளமாட்டோம்.
ஆனால், ‘இது தவறு’ என்பதைக் கடந்த ஆண்டு வெள்ளியின் ‘கிடுகிடு’ விலை உயர்வு நமக்குக் காண்பித்துவிட்டது.
2025-ம் ஆண்டு மட்டும் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கிட்டத்தட்ட 160 சதவிகிதம் உயர்ந்தது.
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சென்னையில் ரூ.98-க்கு விற்பனையான வெள்ளி, அந்த ஆண்டின் இறுதி நாளில் (டிசம்பர் 31) ரூ.257-க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. வெள்ளி தான் இனி “நியூ கோல்டு’ என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் வெள்ளியை அதிகம் கவனிக்காமல் அசால்டாக விற்றவர்கள், 2025-ம் ஆண்டின் பின்பாதியில் வெள்ளி இ.டி.எஃப் முதலீடு, பிசிக்கல் வெள்ளி வாங்குவது என ஆர்வம் காட்டினார்கள்.
இப்படி அமோகமாக உயர்ந்துகொண்டிருந்த வெள்ளி விலைக்குப் பிரேக் போட்டது சர்வதேச சூழல்கள்.
இப்போது…
சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 55 டாலர்… சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.240.
‘இப்போ என்ன அதுக்கு’ என்று கேட்கிறீர்களா? 2025-ம் ஆண்டு செய்த தவறை இப்போது செய்ய வேண்டாம் என்பதற்காகத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டன.
சோலார் பேனல்கள் தொடங்கி செமிகண்டக்டர்கள், ஏ.ஐ சிப் ஆகியவற்றிற்குக் கட்டாயம் வெள்ளி தேவை.
இதனால், போர்ச்சூழல் அடங்கிக் கட்டமைப்பு வேலைகள் தொடங்கும்போதும், சமீபத்தில் மட்டுப்பட்டிருக்கும் ஏ.ஐயின் வளர்ச்சி மீண்டும் ஓங்கும்போதும், வெள்ளி விலை நிச்சயம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.