ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்த ஈரான்.. அமைதி பேச்சுவார்த்தைக்கு புதிய சிக்கல்? | Iran Announces Closure of Strait of Hormuz, Raising Fears Over Global Oil Supply

Spread the love

International

-Mani Singh S

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய ஈரான், உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச எண்ணெய் மற்றும் கப்பல் போக்குவரத்து சந்தைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இறுதி ஒப்பந்தத்தை 60 நாட்களில் ஏற்படுத்தி போரை நிரந்தரமாக நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற உள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Iran Announces Closure of Strait of Hormuz Raising Fears Over Global Oil Supply

ஹார்மூஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படுவதாக

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் ராணுவம் தடை விதித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு ராணுவக் கட்டளையகமான ‘காதம் அல்-அன்பியா’ தலைமையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஈரானிய செய்தி முகமையான ‘மெஹ்ர்’ தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகவும், இது ஒரு “நம்பிக்கை துரோகம்” என்றும், இதற்குப் பதிலடியாகவே இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தங்களின் முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே என்றும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இத்தகைய அத்துமீறல்கள் தொடர்ந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மறுப்பு

போர்நிறுத்த உடன்படிக்கையின் முதல் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறியுள்ளதாக ஈரான் நினைப்பதால், தற்போது இந்த முடிவுக்கு வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால், இந்த ஜலசந்தி மீண்டும் முடக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும்.

எனினும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாக வெளியான தகவலை அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூருகையில், ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்ட 14 அம்ச உடன்படிக்கையின் கீழ் எட்டப்பட்ட போர்நிறுத்தம் நீடிக்கும் என்பதில் தனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் அமெரிக்காவிற்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே பதற்றம்

லெபனானில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இந்த மோதல் ஈரான் தொடர்பான பிற அரசியல் ரீதியான முயற்சிகளையும், பிராந்திய அமைதிக்கான பேச்சுவார்த்தையையும் பாதிக்கும் என்ற அச்சத்திற்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்காக சுவிட்சர்லாந்து நடக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு இருக்கும் போர் நிறுத்தம் தற்காலிக நிம்மதியைத் தந்துள்ள போதிலும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற போக்குவரத்து போன்ற முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற இந்த பேச்சுவார்த்தை எந்தளவுக்கு உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய பதற்றங்களுக்கு மத்தியில், இடைக்கால ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானிய குழுவும் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *