வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அன்று வளர்பிறை சபமுகூர்த்த நாள்.
பூங்கா வன தோட்டத்து பங்களாவில் சுறுசுறுப்பாக காலைப்பொழுதுவிடிந்தது.
தோட்டகார மாரப்பன் விடியும் முன்பே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி முடித்து விட்டு
பூஜைக்காக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தான். வாசல் தெளித்து கோலம் போட வந்த பூங்கொடியை கூப்பிட்டு “என்ன எல்லாரும் எந்திரிச்சுட்டாங்களா ?சீக்கிரமா எல்லாம் தயாராயிருவாங்களா? என்றான்.
அதெல்லாம் எப்போவே தயாராயிட்டாங்க. ரொம்ப குஷியா இருக்காங்க. பெரியம்மா வெளியே கிளம்பிட்டாங்கன்னா போதும். எல்லாரும் வெளியே வந்திருவாங்க. சின்னையாவுக, அப்புறம் சின்னம்மாமாருங்க கிட்டல்லாம் நேத்தே பெர்மிஷன் வாங்கியாச்சு. டிரைவர் கூட ஷெட்டுல இருந்து காரெல்லாம் தொடச்சு கொண்டு வந்துட்டாரு.. சரி சரி நான் உள்ளாற போறேன், பேசிட்டு இருக்கிறதை பாத்தாங்கன்னா காலையிலேய திட்டு வாங்கவேண்டி வரும்…
குனிஞ்சபடி பேசிக்கொண்டே கோலம் போட்டு முடித்தவள் சடாரென்னு உள்ள போயிட்டா. . மாரப்பனும் அமைதியாயிட்டான்.

அது வேறொன்னமில்ல, இந்த பங்களாவுலே எடுபிடிவேலை செஞ்சுட்டு அப்டியே சமையல் வேலைக்குள்ளும் பூந்துட்ட குட்டியப்பனுக்கு இன்னிக்கு கார்த்தால முதல் முகூர்த்தத்துல மலைக் கோயில்ல கல்யாணம்.
பொண்ணு இங்கதான் பொன்னாக்காணி பக்கத்துல சின்னக்குயிலை கிராமம். ரொம்ப சின்னப் பொண்ணாம், குட்டியப்பன் நாலு பவுனு போட்டு பரிசப்பணமும் குடுத்து கல்யாணம் ஆகுதாம்.
செலவு எல்லாம் குட்டிப்பனோடது தான், பொண்ணு பாக்க போறப்ப கூடப்போன சமையல்கார தொரையண்ணன் சொன்ன தகவல் இது. வள்ளியம்மா குட்டியப்பனோட அம்மா இதே ஊர்தான்.
ரொம்ப காலத்துக்கு முன்னாடியே புருஷன் காலமாயிட்டாரு. காடுதோட்டம் எல்லாம் இருந்தும் ஒத்த புள்ளைககு ஏதும் ஆயிடக் கூடாதுன்னு பங்காளிகளுக்கு விட்டுட்டு வந்துட்டாங்க. ஜாக்கெட் போடமாட்டாங்க, தும்பைப்பூ மாதிரி எப்பவும் வெள்ளைசேலை தான் கட்டுவாங்க. துறுதுறுன்னு சுறுசுறுப்பா இருப்பாங்க. முதலாளி அம்மா (ஜோதியம்மா)ரொம்பவே கெத்தா இருப்பாங்க. எல்லாரும் பெரியம்மான்னு தான் சொல்வாங்க.
சின்ன பேரன் சித்து( பனிரெண்டு வயது) மட்டும் ஜோத்தீ என்று அழுத்தி கூப்பிடுவான். இறந்துவிட்ட தன் கணவரின் கம்பீரம் அந்தக்குரலில் தெரிவதாக பெரியம்மாவுக்கு பெருமை. அதற்காகவே மகன்கள் இருவரும் மருமகள்களும் சிந்துவின் மூலம் சிலசமயம் சில காரியத்த சாதிச்சுக்குவாங்க. பெரியம்மாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் எதுவும் நடக்கும்.
அந்தளவுக்கு கறாரான ஜோதிஅம்மா. ஜோசியம், நேரங்காலம் சகுனம் பாத்துட்டுதான் எல்லாம் செய்வாங்க. இப்பகூட குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு செலக்கரிச்சல் ஜோசியரைப்(,பூமி வாங்குவது குறித்து கேட்க) பாத்துவர கிளம்பி இருக்காங்க.
வீட்டிலிருந்த எல்லார் கண்களும் இவங்க மேல்தான் இருந்தது. இந்நேரம் முகூர்த்தமே முடிஞ்சிருக்கும்.. இன்னும் கார் ஏற மாட்டேங்குறாங்களே என்று அங்கலாய்த்து கொண்டிருந்தனர்… அப்போது தான் அது நடந்தது.
கேட் வாசலை அடைத்த மாதிரி அந்த மாட்டுவண்டி வந்து நின்னுச்சு.. வண்டியிலிருந்து முதல்லே வள்ளியம்மா இறங்குச்சு. பாத்து எறங்குங்க சாமி சீலை,வேட்டி ஏதும் தடுக்கப்போகுது, என்ற வள்ளீம்மா குரல் கேட்டது. வீட்டுக்குள்ளிருந்த மொத்தப்பேரும் ஒருவித ஆவலுடனும் சந்தோஷத்துடனும் கதவருகே வரத்தொடங்கினர்.
முன்னேற முயன்ற கால்கள் சடன் பிரேக் அடித்தது போல் நின்றன. கதவருகே பெரியம்மா நின்று கொண்டிருந்தாங்க…. முகத்தில் கோபம்,கோபம்,அவ்வளவு கோபம்….. வள்ளியம்மா பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிகிட்டு உள்ளே வந்துச்சு….எல்லார் பார்வையும் குவிலென்சாய் பெரியம்மா மீதும் குழிலென்சாய் வள்ளீம்மா, பொண்ணு மாப்பிள்ளைமீதும் விழுந்தது…..
” கண்ணூ! வாசப்படி ஏறி பெரியம்மா காலைத்தொட்டு கும்பிடு (ஆசீர்வாதம்) வாங்கிக்கிங்க.”. ன்னு
வள்ளியம்மா சொல்லி முடிக்கும் முன்னாலேயே” நில்லு அங்கெயே,
மேல வராதே, உங்களுக்கெல்லாம் நேரங்காலமே இல்லியா, இங்கிதமே தெரியாதா, இப்படித்தான் வெள்ளிக்கிழமை காலையிலே நான் வெளிய கிளம்பற சமயத்தில வெள்ளசேலைய கட்டிகிட்டு குறுக்கே வந்து நிப்பியா? போற காரியம் விளங்கினாப்பல தான்”! உரத்த குரலில் திட்டிவிட்டு உள்ளே திரும்பினார் பெரியம்மா.
மகன்களும் மருமகள்களும் திடுக்கிட்டு நின்றனர். வேலையாட்கள் பயந்து நடுங்கி பின்னால் போய் ஒடுங்கி நின்றனர்..
அங்கே ஒரு அசாதாரண அமைதி நிறைந்திருந்தது.
சத்தம் கேட்டு தன் அறைக்குள் இருந்து வெளியே வந்த சித்து “ஏன் ஜோத்தீ என்னாச்சு ? எதுக்கு இத்தனை கோபம்? சாப்பிட்டியா?” என்றான்.
” சித்து! பேசாம இரு , பாட்டியை டிஸ்டர்ப் பண்ணாதே “,என்று பாட்டியின் பின்னால் போன மகனைதடுத்தாள் கிரிஜா.. தடுக்காதே, விட்டுடு என்று ஜாடை காட்டினாள் மூத்த மருமகள் காஞ்சனா..
“எதுக்கு ஜோத்தீ கோபம்? BP அதிகமாக ஏறப்போகுது. இந்தா கொஞ்சம் வார்ம் வாட்டர் குடிச்சுட்டு உட்கார்,calm down! “என்றான்..
மகன்களும் மருமகள்களும் பொருள் புரியாத பார்வையை பரிமாறிக்கொண்டனர்.அங்கு ஒரு சாந்தம் உள்வர முயன்றது.

தண்ணீரை வாங்கிக்குடித்த பெரியம்மா “அது ஒண்ணுமில்லடா சித்து கண்ணா! ஒரு பூமி விஷயமா பேசி முடிக்க கோவிலுக்கு போயிட்டு அப்படியே நம்ம ஜோசியரையும் பாத்துட்டு வரலாம்னு கிளம்பினேன்.. வாசப்படி எறங்குறப்பவே இந்த வள்ளியம்மா வெள்ளை சேலையக் கட்டிகிட்டு குறுக்கே வந்து நிக்கிறா. போற வேலை நடக்குமா? பையனுக்கு கல்யாணம்.. னா முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு போக வேண்டியது தானே , எதுக்கு இங்க வந்து சகுனத்தடை பண்ணணும்? அதான் கோபப்பட்டு கத்திட்டேன், ” என்றார் பாட்டி.
“ரிலாக்ஸ் ஜோத்தீ!, ரிலாக்ஸ்!உனக்கு கோபத்தை தந்தது அவங்க வந்ததா இல்லை அவங்க கட்டியிருந்த வெள்ளை சேலையா?”
” வெள்ளைசேலையப் பாத்துட்டு போனா அந்தக்காரியம் கைகூடாதுன்னு சொல்வாங்க. பேசப்போறதுபெரிய லெவல் சொத்து பத்தின காரியம்..அதான்……”
” வள்ளீம்மா ஏன் வெள்ளை சேலை மட்டுமே கட்றாங்க?”
” அவ வீட்டுக்காரர் செத்துப் போயிட்டார் .புருஷனில்லாத பொம்பளைக வெள்ளைசேலை கட்டிக்கிறது தான் நம்மூர் வழக்கம்”….பேரனுக்கு விளக்கினார் பாட்டி.
” அப்ப …. நீ…. நீ……. ஜோத்தீ!!??நம்ம தாத்தாவும் தானே இல்லாம செத்துப்போயிட்டாரு!”
தலையில் ஓங்கி சம்மட்டியால் அடித்தது போலிருந்தது அங்கு நின்று கொண்டிருந்தவர்களுக்கு..
பூமியே பிளந்து தன்னை உள்வாங்கி கொண்டது போலிருந்தது பெரியம்மாவுக்கு…..
இந்த சூழலை யாரும் எதிர்பார்க்கவில்லை. மருமகள்களிடம் திருப்தி தெரிந்தது. தங்களை தூக்கி பந்தாடும் மாமியாரை குட்டிப்பயல் கட்டுக்குள் கொண்டு வந்ததாக சந்தோஷப்பட்டனர். இதன் பின்னணி என்னவாக விஸ்வரூபம் எடுக்குமோ
என்று மகன்கள் அச்சப்பட்டனர்..
“அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவை விட அப்பத்தாவுக்கு பாடம்சொன்ன நம்ம வீட்டு சித்து அய்யா மேல் “எனக் கூறியபடி
ஆனந்தத்துடன் வேலை ஆட்கள் கலைந்து சென்றனர்.
சோர்ந்து போன பெரியம்மா பூஜை அறைக்குள்சென்று
மெதுவாக அமர்ந்தார்….
அந்த அறைக்குள் போட்டோ பிரேமுக்குள் இருந்த தாத்தாவிடம் பாட்டிக்கு அமைதியை காட்டும்படி கூறிவிட்டு வெளியில் வந்த சித்து மற்ற வேலை ஆட்கள் மத்தியில் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்த மணமக்களுக்கு வாழ்த்துகளை சொன்னான்… மதிய விருந்துக்கு வர தயாராக இருப்பதாக கூறிய மற்றவர்களுடன் தானும் வருவதாக கூறினான். கிரிஜா , காஞ்சனா ,உத்தமன் ,சுதர்சனமும் வெளியில் வந்து வீட்டுக்குள் அழைத்தனர்.. பிறகு வருவதாக கூறிய வள்ளியம்மாவிடம் மொய் பணம் தர முற்பட்ட போது அவர்களிடமிருந்து அதை வாங்க மறுத்தவள் மதிய விருந்துக்கு அவர்களை வற்புறுத்தி அழைத்தாள்.
மணமக்களின் கரம் பற்றி குலுக்கி வாழ்த்து சொன்ன சித்து, பாட்டியின் செயலுக்கு மன்னிப்பு கோரினான்….”கோபமுள்ள எடத்தில தான் குணமும் இருக்கும்.,தம்பி .. பெரியம்மாவப்பத்தி எனக்கு தெரியும்
ரெண்டு நாள் நான் வரலேன்னா வீடு தேடி வந்துடுவாங்க. சரி சாமி, நாங்க வர்றோம், வந்த சனமெல்லாம் வீட்ல காத்திட்டிருப்பாங்க,எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க ” என்று கூறி விட்டு வண்டியில் ஏறி கிளம்பினர்..
உள்ளே வந்து பூஜை அறையில் பார்த்தப்ப பெரியம்மாவின் கன்னங்களில் கண்ணீர்கோடுகள் நீண்டிருந்தன..முகத்தில் தவறை உணர்ந்த நிம்மதி தெரிந்தது… கண்களில் தாத்தாவிடம் பெற்ற அறிவுரை பிரதிபலித்தது..
கையூன்றி எழ முற்பட்டபோது கிரிஜாவும் காஞ்சனாவும் அவரை இருபக்கமும் தாங்கி தூக்கி விட்டனர்..
ஹாலில் காத்திருந்த செலக்கரிச்சல் ஜோசியரிடம் உத்தமனும் சுதர்சனமும் பேசிக்
கொண்டிருந்தனர். ஜோதியம்மாவைப்
பாத்து வணங்கிய ரங்கசாமி ஜோசியர் “அம்மா அந்த பூமியை உங்களுக்கே அதுவும் நீங்க கேட்ட அந்த விலைக்கே தர பார்ட்டி ஒத்துகிட்டாங்கம்மா! ஆளனுப்பி சொன்னாங்கம்மா. அந்த சமயத்துல சிந்திலுப்பு பஸ் வந்துச்சு. சரி உங்ககிட்ட நேரடியாவே தகவல் சொல்லிறலாம்னு ஏறி வந்துட்டேன்,”,என்றார்.
” நல்லது ஜோசியரே! எங்க குடும்பத்துஉள்ளவங்க கிட்ட
கலந்து பேசிட்டு ரெண்டொரு நாள்லே பதில்சொல்றோம்
மேற்கொண்டு மத்ததை பாப்போம் என்றவர், மருமகள்கள் பக்கம் திரும்பி, “இந்தாங்க சாவி, ரங்கசாமிக்கு எவ்வளவுன்னு கேட்டு நல்லபடியா குடுத்தனுப்புங்க” என்றார்..கிரிஜாவுக்கும் காஞ்சனாவுக்கும் ஆச்சரியத்தில் மயக்கமே வந்துவிட்டது… சாவிக்கொத்தை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டே உள்ளே சென்றனர்.
மகன்களைப் பாத்து “மத்தியானம் வள்ளியம்மா வீட்டுக்கு மத்தவங்க போகும் போது நீங்க எல்லாரும் கூடவே போயிட்டு வந்திடுங்க.நம்ம ஆளுங்க அங்க பிரியப்படற நேரம் வரைக்கும் இருந்துட்டு வரட்டும்.. சொல்லிருங்க..அவங்க ஒறமுறை
( உறவுமுறை)எல்லாம் முடிஞ்சதும் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரச்சொல்லிட்டு வாங்க… மறக்காம வள்ளியம்மாவையும் கூப்பிட்டு வரச்சொல்லுங்க,மறந்திறாதீங்க” என்றார்…!
மகன்கள் அமைதியாக தலையாட்டினர்..
தயங்கி தயங்கி அருகில் வந்த சித்து” ஸாரி ஜோத்தீ! நீ கஷ்டப்படற மாதிரி பேசிட்டேன், இனிமே இப்படி பேசமாட்டேன், “என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா சித்து கண்ணா! இது நீ பேசலை. உன் தாத்தா தான் உன்மூலமா பேசிருக்கார். நீ பேசினதெல்லாம் ரொம்ப சரி, தப்பே?இல்ல ராஜா,” என்றவுடன் “தேங்க் யூ ஜோத்தீ , “என்று வந்து கட்டிக் கொண்டான் சித்து. சுத்திநின்னு இதைப்பார்தத
எல்லாரும் சந்தோஷமாய் சிரித்தனர்….
என்ன தான் வெளிப் பார்வைக்கு
காட்டிக்கொள்ளாமல் விட்டாலும் மனதுக்குள் நிறைய வலித்தது வள்ளியம்மாவுக்கு. தாய் எப்படியோ கஷ்டப்பட்டு வளர்த்திருந்தாலும் அப்பா இல்லாத குறை அன்றைக்கு குட்டியப்பனை ஆட்டிப்படைத்தது.. தான் திட்டு வாங்கினாலும் பயந்து அழுத மருமகளை( தன்னை) தாங்கி நின்று ஆறுதல் படுத்திய மாமியாரைப் பார்த்து கண்ணீர் திரண்டது அந்த புது மணப்பெண்
பாப்பாவுக்கு….
அனுப்புநர்
நீலவேணி தேவராஜன்,
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ