பருவமழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகரிப்பதால் நோய்த்தொற்றுகள் எளிதில் பரவக்கூடும். வெப்பநிலை மாற்றமும் அதிகரித்த ஈரப்பதமும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை பலவீனப்படுத்தும். இதுபோன்ற சூழலில், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சூப்பர் ஃபுட்ஸ் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
அந்த வகையில், உடலுக்கு வெப்பத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்து, நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் சத்தான சூப் வகைகளை சிநேகிதிகள் இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். தினமும் ஒரு சூப் செய்து பருகுங்கள், ஆரோக்யமாக இருங்கள்!
அருகம்புல் சூப்:
தேவையானவை: அருகம்புல் 2 கைப்பிடி, வெற்றிலை, துளசி, ஓமவல்லி – தலா ஒரு பிடி, சோளமாவு – 2 டீஸ்பூன், சீரக மிளகுத் தூள் – 2 டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, தேன் – 1 டீஸ்பூன்.
செய்முறை: இலைகளை சுத்தம் செய்து மிக்சியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும். அல்லது அருகம்புல் மட்டும் அரைத்து வடிகட்டி மற்ற இலைகளை துண்டுகளாக நறுக்கி சேர்க்கலாம். பிறகு நீர் சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீரில் சோளமாவு கரைத்து உப்பு, சீரக மிளகுத்தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கி, தேன் சேர்த்து கொடுக்கவும்.
பலன்: மழைக்காலங்களில் நொயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
– ப்ரித்தா ரங்கசாமி, சென்னை.
பார்லி சூப்:
தேவையானவை: பார்லி – 1/4 கப், தக்காளி -1, காலிபிளவர், காரட், பீன்ஸ் – சிறிதளவு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகத் தூள் 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், மல்லித்தழை – தேவைக்கு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு பீன்ஸ், காரட், காலிஃபிளவர் சேர்த்து வதக்கி அரைத்த தக்காளி பேஸ்ட் மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும். பிறகு 2 மணி நேரம் ஊறவைத்த ஊறிய பார்லியை சேர்த்து 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் விடவும். மிளகுத் தூள், மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பலன்: கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்யத்தை மேம்படுத்தும் சூப்பர் சூப் இது.
– எம். வசந்தா, சென்னை.
சிறுதானிய சூப்:
தேவையானவை: தினை, சாமை தலா 1 கப், கேரட், தக்காளி – 1, பூண்டு – 4 பல், மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன் கல் உப்பு – தேவைக்கு.
செய்முறை: தினை, சாமையை கழுவி, வெயிலில் உலர்த்தி, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ள லாம். பொடியாக நறுக்கிய கேரட், தக்காளியை வேகவைத்து, மிளகு, சீரகம், பூண்டை ஒன்றாக அரைக்கவும். காய்கறிகள் வெந்ததும், தேவையான அளவு சிறுதானியப் பொடி மற்றும் அரைத்த மிளகு, சீரகம், பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
பலன்:
செரிமானத்தை மேம்படுத்தி உடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுக்கொள்ள உதவும்.
- கல்பனா ராஜகோபால், கோயம்புத்தூர்.

