கண்காட்சி பற்றி அதன் குழுவினர் மற்றும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்….
இந்த ஓவிய கண்காட்சியை ஒருங்கிணைத்த குழு நிறுவர்களில் ஒருவரான பிரதாப் ஸ்டாலின் நம்மிடம் பேசுகையில்,
இந்த அமைப்பை நான் மற்றும் எனது நண்பர்களான சுமணா, நம்ரதா, சுரேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கினோம். நாங்கள் நால்வரும் சென்னையில் ஒரே பேட்சில் 2002-ல் கலைப் படிப்பை முடித்தவர்கள். இதன் தொடக்கப் புள்ளியாக ஒரே பேட்ச் மாணவர்கள் மற்றும் சூப்பர் சீனியர்கள் என சுமார் 30 பேர் சேர்ந்து சென்னை லலித் கலா அகாடமியில் ஒரு அலுமினி ஷோ (Alumni Show) நடத்தினோம். இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பை பார்த்து மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக இது வெறும் ஒரே வயதுப் பிரிவினருக்கான கண்காட்சி அல்ல, இதில் சூப்பர் சீனியர்கள், சீனியர்கள், இப்போதைய கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்காத கலை ஆர்வம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைக்கப்பட்டுள்ளனர். பெரிய கலைஞர்கள் மற்றும் முதல்முறை வரையும் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரது படைப்புகளையும் ஒரே வரிசையில் முறைப்படுத்தி காட்சிப்படுத்தி உள்ளோம்.
இதில் ஸ்கல்ப்சர் (Sculpture), மாடலிங், வாட்டர் கலர் ஓவியங்கள் என மொத்தம் சுமார் 130 கலைப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.பல கலைஞர்கள் தங்களின் முதல் கண்காட்சியாகவும், சிலர் 5வது அல்லது 6வது முறையாகவும் இதில் பங்கேற்றுள்ளனர். கடந்த 7-8 மாதங்களாக வாட்ஸ்அப் குழுக்கள், ஆன்லைன் புரொபைல் பிக்கப், இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் இதற்கான விளம்பரப் பணிகளை தீவிரமாகச் செய்து வந்தோம் அதன் பலனாக இது அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் சென்றுள்ளதை நேரடியாகவே அறிகிறோம். மேலும் இந்த ஒருங்கிணைந்த கண்காட்சியை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இத்தகைய முயற்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், பலரும் தங்களது முதல் வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சினிமா சார்ந்த பிரபலங்கள் பெரும் வரவேற்பும் ஊக்கமும் தந்து வாழ்த்தி செல்கின்றனர். கலைக்கு வயது, அனுபவம் என்ற எந்தவித வேறுபாடும் கிடையாது; அனைத்து கலைஞர்களின் படைப்புகளையும் ஒரே மேடையில் கொண்டு வருவதே இந்த “ஆரே எலிமெண்டல்” கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், இதில் கலந்து கொண்ட இளம் வயது ஓவிய கலைஞர் விஜயராகவனிடம் பேசுகையில், “நான் அரசு நுண்கலைக் கல்லூரியில் (Government College of Fine Arts) இறுதி ஆண்டு சிற்பவியல் (Sculpture) பிரிவில் கல்வி பயின்று வருகிறேன். இந்த கண்காட்சியில் ஃபைபர் (Fiber) மூலப்பொருளைப் பயன்படுத்தி எனது படைப்புகளை உருவாக்கியுள்ளேன். இந்த கண்காட்சிக்காக 4 மாதங்களாக 25 கலைஞர்கள் இணைந்து கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளனர்.
நாங்கள் கொடுத்த கடின உழைப்புக்கு ஏற்ற நற்பெயரும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தான் சொல்ல நினைப்பதை எந்தவித விளக்கமும் இன்றி பார்வையாளர்களின் மனதுடன் நேரடியாக இணைப்பதுதான் கலையின் உண்மையான வெற்றி, நான் செய்ய நினைத்ததை பார்வையாளர்கள் புரிந்து கொள்வது மிகுந்த திருப்தியைத் தருகிறது” என்றார். மேலும், முதல் முறையாக இதுபோன்ற ஒரு கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளதையும், இதில் கிடைத்த பாராட்டுகள், ஆதரவை தொடர்ந்து மேலும் பல புதுமையான படைப்புகளைச் செய்து தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆர்வமுடன் உள்ளதாக கூறினார்.
பார்வையாளர் ஒருவருடன் பேசுகையில், “இது வெறும் ஒரு ஓவிய கண்காட்சியாக இருக்கும் என்று வந்தேன். ஆனால் இங்கு வந்து இங்குள்ள ஓவியம் மற்றும் அவர்களின் வேலைப்பாடுகளை பார்த்த போது ஆச்சரியமாகவும், மகிழ்சியாகவும் இருந்தது. இதில் கிடைத்த அனுபவம் வித்தியாசமாகவும் இருந்தது. மேலும் எனக்கும் இந்த கலை படைப்புகளின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த மாதிரி கலைஞர்களை ஆதரிக்க இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வந்து ஆதரவு தர வேண்டும்” எனக் கேட்டு கொண்டார்.