`வேற வழியிலதான் வர்றோம், ஆனாலும் திக்னு இருக்கு!' – சீனா டு காட்மண்டு பயணத்திலிருக்கும் ரேணுகாதேவி

Spread the love

ஒட்டு மொத்த உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது நேபாள நாட்டில் நிகழ்ந்த பெருவெள்ள பேரிடர். பனிப்பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததாலேயே இத்தகையதொரு பெரிய துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாக கூறுகின்றனர் நிலவியல் ஆய்வாளர்கள்.

இந்தப் பேரிடர் நிகழ்ந்த சமயத்தில் இந்தியாவிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற நூற்றுக் கணக்கான இந்திய‌ர்களும் அங்கு இருந்த நிலையில் அவர்களில் பலரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஜக்கி வாசுதேவ் தன் ஈஷா மையத்திலிருந்து சென்றவர்களில் சுமார் எழுபது பேரின் நிலைமை குறித்து தெரிய‌வில்லை எனக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து ஆன்மிகப் பேச்சாளர் தேச மங்கையர்க்கரசி தலைமையில் 150 பேர் யாத்திரை சென்றிருந்த நிலையில், அவர்கள் பத்திரமாக இருப்பதாக மங்கையர்க்கரசி நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தக் குழுவில் ஒருவராகச் சென்றிருக்கும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த நியாயவிலைக் கடைப் பணியாளர் ரேணுகா தேவியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

renuga devii on kailash yatra

”சம்பவம் நடந்த அன்னைக்கு நாங்க கைலாய மலை மேல இருக்கோம். நாங்க குரூப்பா போயிருந்த எல்லோருமே ஆரம்பத்துல இருந்தே சேர்ந்து ஒரே இடத்துல தங்கற மாதிரிதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால எங்களில் யாரும் மிஸ் ஆகற சூழல் உருவாகலை. ஆனா நடந்த சம்பவம் குறித்த தகவல் உடனே எங்களுக்கு கிடைச்சிடுச்சு.

தொடர்ந்து அது தொடர்பான வீடியோக்களைப் பார்த்ததுல மனசு ரொம்பவே கஷ்டமாகிடுச்சு. நாங்க நல்லப‌டியா மலையைச் சுத்தி சிவனைத் தரிசிச்சிட்டோம். ஆனா யாத்திரை வந்துகிட்டிருந்த பலருடைய நிலைமை தெரியலைன்னு கேள்விப்பட்டோம். அவங்க குடும்பத்தினரெல்லாம் பதட்டம் எந்தளவுக்கு இருக்கும்னு சொல்ல‌த் தேவையில்லை.

ரேணுகாதேவி

நேற்று முன் தினம் நாங்க சீனாவுல பாதுகாப்பா இருந்தோம். அங்கிருந்துதான் தேச மங்கையர்க்கரசி வீடியோ வெளியிட்டாங்க. இப்ப சீனாவுல இருந்து மாற்று வழியில நேபாள தலைநகர் காட்மாண்டுக்குப் பஸ்ல போயிட்டிருக்கோம். வழக்கமா சீனாவுல இருந்து காட்மாண்டுக்கு வர்ற வழியிலிருக்கும் மாவட்டங்கள்தான் இப்ப வெள்ளப் பாதிப்பைச் சந்தித்திருப்பதால் இந்த மாற்றுப் பாதையில் போயிட்டிருக்கோம்.

இந்த பேருந்து பயணமே அதிக கிலோ மீட்டர் தொலைவானதுதானாம். அதாவது 30 ம் தேதிதான் நாங்க காட்மாண்டை அடைவோம். அங்கிருந்து விமானத்தல டெல்லி வருவோம்” என்கிறார்.

பனிப்பாறை உடைந்து நிகழ்ந்த வெள்ளம் என்பதால் கடந்த இரு தினங்களாக நேபாள – சீன எல்லையில் வழக்கத்துக்கு மாறாக அதிக குளிரும் நிலவுவதாகக் கூறிய ரேணுகா தேவி, ‘இப்ப நாங்க தேர்ந்தெடுத்திருக்கிற பாதையில் எந்தப் பிரச்னையும் இருக்காதுனு சொன்னாங்க. ஆனா பனி மலைகளுக்கு ஊடாகவே செல்கிற பயணம் திக் திக் னுதான் இருக்கு. ஜன்னல் வழியே பனிமலைகளைப் பார்த்தாலே பயமாத்தான் இருக்கு. பத்திரமா ஊருக்கு கொண்டு போய்ச் சேர்த்திடு சிவனே’னு வேண்டிகிட்டே ட்ராவல் பண்ணிட்டிருக்கோம்’ என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *