வெளிநாடுகளுக்கு பொம்மைகளை அனுப்பும்போது எடை முக்கியமானதாக இருப்பதால், லைட்வெயிட் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பொம்மைகள் உடையாமல், சேதமடையாமல் சென்று சேருவதற்காக Bubble பேப்பர் உள்ளிட்ட பாதுகாப்பான பேக்கிங் முறைகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட கூரியர் மூலம் அனுப்புகின்றனர். இதன் மூலம் விளாச்சேரியில் உருவாகும் பொம்மைகள் கடல் கடந்தும் சென்று கொண்டிருக்கின்றன.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தற்போது கிருஷ்ணர் பொம்மைகளுக்கான தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேவையான பொம்மைகளை முன்கூட்டியே தயாரித்து பேக் செய்து வைத்துள்ள நிலையில், ஆர்டர்கள் வர வர அவற்றை அனுப்புவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ண ஜெயந்தி முடிந்ததும் விநாயகர் சதுர்த்தி, அதன் பிறகு நவராத்திரி கொலு என அடுத்தடுத்த பண்டிகைகளுக்கான பணிகள் தொடங்கிவிடுகின்றன. கொலு சீசனில் அதிகமான தேவை இருப்பதால் இரவு பகலாக வேலை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அதன் பிறகு கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கும் பணி தொடர்கிறது.
உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் சேர்த்து வெளியூர்களில் உள்ள வழக்கமான வாடிக்கையாளர்களும் தொலைபேசி மூலம் ஆர்டர்களை வழங்குகின்றனர். ஒரு பண்டிகைக்கான வேலை முடிவதற்குள் அடுத்த பண்டிகைக்கான வேலை தொடங்கிவிடும் அளவுக்கு இந்தத் தொழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
வீடுகளின் கொலு படிகளில் அழகாக அமரப்போகும் ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னாலும் பல நாள்கள் உழைக்கும் கைகளும், ஒரு கிராமத்தின் வாழ்வாதாரமும் இருக்கிறது. விளாச்சேரியில் உருவாகும் இந்தப் பொம்மைகள் பண்டிகைகளை மட்டும் அலங்கரிப்பதில்லை; தலைமுறைகள் கடந்து வரும் ஒரு பாரம்பர்யத் தொழிலையும் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.