வேலுமணியுடன் உரசல்; எடப்பாடியின் கொங்கு கணக்கு… செந்தில் பாலாஜியின் மெளனம்! – பரபரக்கும் களம்!

Spread the love

செந்தில் பாலாஜி தி.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதாக கரூர் மாவட்டத்தில் பரவும் தகவலால், கரூர் மாவட்ட அரசியல் களத்தில் அனலடிக்கிறது.

அவரைச் சுற்றி இப்படி வட்டமிடும் அதிரிபுதிரி தகவலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை எந்தவொரு மறுப்போ விளக்கமோ அளிக்காமல் மௌனமாக இருக்கிறார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் இருந்து பல புள்ளிகள் த.வெ.க-வில் இணைந்து வருகின்றனர். வாராவாரம் , இத்தகைய இணைப்பு மேளா நடந்து வருவது, தமிழக அரசியல் களத்தை சீட்டுக் கட்டுபோல் கலைத்து போட்டு வருகிறது.

pathivu

இந்த வரிசையில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இணைய இருப்பதாக சில நாட்களாக பரபர பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அதேபோல், சமூக வலைத்தளங்களில் சிலர், ‘செந்தில் பாலாஜி த.வெ.க-வில் இணைய போகிறார்’ என்ற பதிவுகள் உலாவர தொடங்கியிருப்பதும், பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால், அதற்கு மறுப்போ, விளக்கமோ கொடுக்காமல் செந்தில் பாலாஜி மௌனம் காத்து வருவது, கரூர் மாவட்ட அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது.

இதுகுறித்து, கரூர் மாவட்ட அரசியல் நிலவரத்தை அறிந்த விவர புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

“வழக்கமாகத் தன் மீது வரும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உடனடியாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ பதிலடி கொடுக்கும் குணம் கொண்ட செந்தில் பாலாஜி. இந்த விவகாரத்தில் காட்டும் அமைதி அரசியல் வட்டாரத்தில் பெரும் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அவரது இந்தத் திடீர் மௌனம் ஒருவேளை திரைமறைவில் நடக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பலப்படுத்தியுள்ளது. இந்த அரசியல் நகர்வுக்குப் பின்னால் கொங்கு மண்டலத்தின் உட்கட்சி அரசியலே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

senthil balaji

கோவையில் அ.தி.மு.க-வின் வலுவான முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மாற்றாக, அதே பிராந்தியத்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தனித்திறமை கொண்ட ஒரு முக்கிய புள்ளியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கு சமீபத்தில் வேலுமணிக்கு எடப்பாடிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் ஆகும்.

இதன் காரணமாகவே, கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் அரசியல் ஆதிக்கத்திற்குச் செக் வைக்கும் நோக்கில் செந்தில் பாலாஜியை மீண்டும் அ.தி.மு.க-வுக்குக் கொண்டு வர இ.பி.எஸ் தீவிரமாக அணுகி வருவதாகவும், அதனாலேயே செந்தில் பாலாஜி இதனை மறுக்காமல் மௌனம் காக்கிறார் என்றும் சிலர் கொளுத்தி போடுகிறார்கள்.

ஆனால், மு.க.ஸ்டாலினை சந்தித்த போட்டோவை வெளியிடுகிறாரே தவிர, இந்த தகவலுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை செந்தில் பாலாஜி. அவரை வட்டமிடும் வழக்கு விசாரணைகளை சமாளிக்க அவர் பா.ஜ.க கூட்டணியில் உள்ள அ.தி.மு.க-வுக்கு தாவ கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். அதேபோல், சமூக வலைதளங்களில் சிலர், ‘செந்தில் பாலாஜி த.வெ.க-வில் இணைய இருக்கிறார்’ என்ற பதிவுகளையும் போட, செந்தில் பாலாஜியை சுற்றி பரபர மேகம் சூழ்ந்துள்ளது” என்றார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *