வேலூர்: `மாமூல் கேட்டு மிரட்டியது உண்மைதான்’ – தவெக ஒன்றியச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

Spread the love

வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் உரிமையாளர்கள் சிலரை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளரான விஜயகுமார். இது தொடர்பாக இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபடும் வீடியோ, அண்மையில் வெளியாகியிருந்தது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்திலும் செங்கல் சூளை உரிமையாளர்கள் புகாரளித்திருந்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், போலீஸார் அவரிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் செங்கல் சூளை உரிமையாளர்களையே அழைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார்

இதனால், கொந்தளித்துபோன அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்றைய தினம் கணியம்பாடி பேருந்து நிறுத்தப் பகுதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியதைத் தட்டிக்கேட்டதால், சூளைக்கு திருட்டு மண் கடத்தியதாக த.வெ.க ஒன்றியச் செயலாளர் சொல்வதைக் கேட்டு போலீஸார் செயல்படுகின்றனர். த.வெ.க ஒன்றியச் செயலாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மக்கள் கொந்தளிப்போடு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், த.வெ.க-வில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான விஜய் மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்த விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

நீக்க அறிவிப்பு

கழக தோழர்கள் கட்சி ரீதியாக அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது. த.வெ.க மாவட்டச் செயலாளர் தரப்பில் விசாரித்தபோது, “ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மாமூல் கேட்டு மிரட்டியது உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்’’ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *