வேலையா, பிசினஸா… நீங்க எதுக்கு சரிப்பட்டு வருவீங்க? உங்களை நீங்களே எடைபோடும் செல்ஃப் டெஸ்ட்!

Spread the love

‘‘நீ படித்து முடித்துவிட்டு என்னவாக ஆகப் போகிறாய்?’’ என்ற கேள்வியை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களிடமோ, கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களிடமோ கேட்டால், ‘‘நான் இன்ஜினீயர், டாக்டர், வக்கீல் ஆகப் போகிறேன்” என்ற பதில்தான் வரும். அவர்கள் சொன்னபடி ஆக முடியாமல் போனாலும் பொறியியல், மருத்துவம், சட்டம் என ஏதாவது ஒருதுறையில் வேலைக்குச் சேரும் அளவில் அவர்களின் எண்ணமும் நகர்வும் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் பல இளைஞர்கள் பிசினஸ் ஆரம்பிக்கப் போகிறேன் என்ற பதிலைச் சொல்கிறார்கள். சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ பிசினஸ் ஆரம்பிக்கிறவர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துத்தான் வருகிறது. ஆனால், அப்படி ஆரம்பிப்பவர்களில் எத்தனை பேர் வெற்றிகரமாக இயங்குகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி.

மாடல் படம்

வேலைக்குச் செல்ல சில திறன்கள் அவசியம்; ஆனால் பிசினஸ் ஆரம்பித்து நடத்த பல திறன்கள் அவசியம். உற்பத்தியில் இருந்து மார்க்கெட்டிங் வரை எல்லா துறைகளையும் ஓரளவு கையாளத் தெரிய வேண்டும். பணியாட்கள் நிர்வாகம் முதல் வரவு செலவுக் கணக்கு வரை தெளிவான நிர்வகிக்கும் திறன் வேண்டும்.

அரசாங்க அனுமதிகள், நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதிவேகமாக மாறிவரும் சந்தை மாற்றங்களை நுட்பமாக ஆய்வு செய்யத் தெரிய வேண்டும். இவற்றோடு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவு, தொடர்புகொள்ளும் திறன் என வெற்றிகரமான தொழில்முனைவோருக்குத் தேவையான விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள் தொழில் ஆலோசகர்கள்.

சென்னையைச் சேர்ந்த மணிசேகரன் ஓராண்டுக்கு முன் இன்டீரியருக்காகவே நிறைய செலவு செய்து ஹோட்டல் ஒன்று ஆரம்பித்தார். மூன்றே மாதங்களில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு ஹோட்டலை மூடிவிட்டார். காரணம், அவர் ஹோட்டல் ஆரம்பிக்கும் முன் கள ஆய்வு எதுவும் செய்யவில்லை. அவர் வாடகை, அட்வான்ஸ் தன் பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும் என்பதற்காக ஹோட்டலை குடியிருப்புப் பகுதியில் ஆரம்பித்தார். அந்தப் பகுதியில் இரண்டு மூன்று கிலோ மீட்டர் வரை சைவ உணவு சாப்பிடுபவர்களே அதிகம் வசிக்கிறார்கள். அவர் ஆரம்பித்தது சைவம் மற்றும் அசைவ ஹோட்டல். சைவ உணவு மட்டுமே சாப்பிடும் மக்கள் அந்த ஹோட்டலுக்கு விரும்பிச் செல்லவில்லை. அசைவ உணவு சாப்பிடும் மக்கள் வெகு சிலரே. எனவே, இடத்துக்கு ஏற்ற வகையில் தொழிலை அமைக்கத் தவறியதே அவருடைய தோல்விக்குக் காரணம் என்பதை அவர் தாமதமாகவே புரிந்துகொண்டார்.

தொழிலில் வருமானம் கிடைப்பதற்கு முன்பே செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வராமல் போகலாம். எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கலாம். சில மாதங்கள் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடலாம். போட்டியாளர்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

வேலைக்குச் சென்றால் வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலையாக இருக்கும் என்றாலும், டென்ஷன் பெரிதாக இருக்காது. ஆனால், சுதந்திரமாகச் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் இருக்கும்.

மாடல் படம்

பலருக்கு ‘நான் வேலைக்குச் சரிப்பட்டு வருவேனா, தொழில் ஆரம்பித்து ஜெயிப்பேனா’ என்ற குழப்பம் இருக்கவே செய்கிறது. ‘தொழில் தொடங்குவதற்கான மனநிலையும் திறனும் எனக்கு இருக்கிறதா?’ என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது. இன்னும் சிலர் பணம் இருக்கிறது என்பதற்காக, தொழிலில் இறங்கி நஷ்டப்பட்டு வெளியேறுகிறார்கள். சிலர் பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கி பிசினஸ் ஆரம்பித்துவிட்டு, பிறகு ‘வேலைக்கே போயிருக்கலாம்’ என நினைத்துத் தவித்துக்கிடக்கிறார்கள். ‘வேலையா, பிசினஸா… எதற்கு நான் சரிப்பட்டு வருவேன்’ என எப்படித் தெரிந்துகொள்வது?

இதற்காகத்தான் பின்வரும் 10 கேள்விகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் உங்களுக்குப் பொருத்தமான பதிலைத் தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு பதிலுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் உண்டு. இறுதியில் உங்கள் மதிப்பெண்களைக் கூட்டிப் பாருங்கள் (மதிப்பெண்கள்: A – 10, B – 8, C – 5, D – 2). வேலையா, பிசினஸா என்பதில் தெளிவைப் பெறுங்கள்.

1. இரண்டு, மூன்று மாதங்கள் மாத வருமானம் வராமல் போனால் எப்படிச் சமாளிப்பீர்கள்?

A. சேமிப்பு இருப்பதால் சமாளித்துவிடுவேன்

B. செலவுகளைக் குறைத்து சமாளிப்பேன்

C. குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் உதவி கேட்பேன்

D. வருமானம் இல்லாமல் சமாளிக்கவே முடியாது

2. எந்தத் துறை சார்ந்த தொழிலில் ஆர்வம், விருப்பம், திறன் உங்களுக்கு இருக்கிறது என்பதில் தெளிவாக இருக்கிறீர்களா?

A. எந்தத்துறை, என்ன பிசினஸ் என்பதை முன்பே தீர்மானித்துவிட்டேன். ஓரளவு திறன், பயிற்சியும் உண்டு.

B. எந்தத்துறை, என்ன பிசினஸ் என்றெல்லாம் முடிவு செய்துள்ளேன். ஆனால், அதில் திறன் பயிற்சி இல்லை.

C. எந்தத்துறை, என்ன பிசினஸ் எனத் தீர்மானிக்கவில்லை. ஆனால், எதுவென்றாலும் ஜெயிக்க முடியும் என நம்பிக்கை உண்டு

D. ஏதாவது ஒரு பிசினஸ் தொடங்கி நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

3. பிசினஸுக்கான மொத்த முதலீட்டுக்கான நிதி நிலை எப்படி?

A. தொழில் ஆரம்பிக்கத் தேவையான மொத்தப் பணமும் தயார்

B. 50% அளவுக்குப் பணம் தயார்; மீதிக்குக் கடன் வாங்கும் திட்டம்

C. 20% அளவுக்குப் பணம் தயார்; மீதிக்கு சிலரிடம் உதவி கேட்கத் திட்டம்

D. கையில் பணம் ஏதும் இல்லை. மொத்தமும் கடன்தான் வாங்க வேண்டும்

4. தொழில் தொடங்கிய பிறகு முதல் சில மாதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வரவில்லை என்றால்?

A. காரணத்தை ஆராய்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்து தொடர்ந்து முயற்சி செய்வேன்

B. ஒன்றிரண்டு வருடங்கள் முயற்சியைத் தொடர திட்டமிடுவேன்

C. தொழிலை மாற்றுவது குறித்து யோசிப்பேன்

D. நஷ்டம் வந்துவிட்டால் உடனே பிசினஸை கைவிட்டு விடுவேன்

5. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உழைக்கலாம் என்பது குறித்து உங்கள் பதில் என்ன?

A. அன்றைய தினம் என் பணி தேவைப்படும் வரை உழைப்பதில் தயக்கம் இல்லை

B. அதிகபட்சம் 12 மணிநேரம் உழைப்பதுதான் ஆரோக்கியமானது.

C. சொந்த வேலையோ, சம்பளத்துக்கு உழைக்கும் வேலையோ 8 மணி நேரம்தான் சரி.

D. மிகக் குறைந்த நேரம் உழைத்து, மிக அதிக வருமானம் வரவேண்டும் என்பதுதான் என் கருத்து

மாடல் படம்

6. தொழில் தொடங்குவதற்கு முன்பு சந்தையைப் பற்றி நீங்கள் எப்படி ஆய்வு செய்வீர்கள்?

A. வாடிக்கையாளர்கள், போட்டியாளர்கள், விலை, செலவு, லாபம் என முழுமையாக ஆய்வு செய்வேன்

B. ஓரளவுக்கு அளவுக்கு விசாரித்துவிட்டு பிசினஸ் செய்வேன்

C. தெரிந்தவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்வேன்

D. எனக்குப் பிடித்த தொழில் என்பதாலும், எனக்கே ஓரளவு தெரியும் என்பதாலும் உடனே தொடங்கிவிடுவேன்

7. உங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்வதில் உங்கள் அணுகுமுறை என்ன?

A. கையில் இருக்கும் முழுப் பணத்தையும் தொழிலில் போடாமல், ஒரு பகுதியை மட்டுமே முதலீடு செய்வேன்

B. பெரும்பகுதியை முதலீடு செய்தாலும், அவசரத் தேவைக்குப் பணம் வைத்திருப்பேன்

C. தொழில் நன்றாக இருக்கும் என்று நம்புவதால், கடன் வாங்கிக்கூட அதிகப் பணத்தை முதலீடு செய்வேன்

D. கையில் இருக்கும், கடன் பெறும், உதவியாகக் கிடைக்கும் எல்லாப் பணத்தையும் தொழிலில் போட்டு பிரமாண்டமாகத் தொடங்குவேன்

8. வாடிக்கையாளர் ஒருவர் உங்கள் பொருளை அல்லது சேவையைப் பற்றி குறை சொன்னால் என்ன செய்வீர்கள்?

A. பொறுமையாகக் கேட்டு, தவறு இருந்தால் சரிசெய்வேன்

B. தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மாற்றம் செய்வேன்

C. சூழ்நிலைக்கு ஏற்ப எனக்கு தோன்றும் முடிவை எடுப்பேன்

D. என்னுடைய பொருளை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்

9. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு துறையில், மற்றொருவர் உங்களைவிடச் சிறப்பாகச் செய்கிறார் என்று தெரிந்தால்?

A. அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு என்னை மேம்படுத்திக்கொள்வேன்

B. அவருடைய செயல்பாட்டைக் கவனித்து தேவையான மாற்றங்களைச் செய்வேன்

C. அவருடைய வெற்றிக்குக் காரணம் அதிர்ஷ்டம் என்று நினைப்பேன்

D. அவரைப் பற்றி கவலைப்படாமல் என் வழியில் மட்டுமே செல்வேன்

10. குடும்பத்துக்கான நிதி நிலை எப்படி?

A. மூன்று வருடங்களுக்குச் சமாளிக்கும் வகையில் குடும்பத்துக்கான பணம் தனியாக உள்ளது

B. ஓராண்டு வரை குடும்பச் செலவுகளைச் சமாளிக்க பணம் உள்ளது

C. மூன்று மாதம் சமாளிக்கலாம். பிறகு தொழிலில் வரும் லாபத்திலிருந்துதான் குடும்பச் செலவுக்கு எடுக்க வேண்டும்

D. குடும்பச் செலவுக்கு என தனியாகப் பணம் ஏதும் ஒதுக்கவில்லை

மதிப்பெண்கள்: A – 10, B – 8, C – 5, D – 2 என்ற அடிப்படையில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் மொத்த மதிப்பெண் அடிப்படையிலான தீர்வுகளைக் கவனியுங்கள்.

75–100 மதிப்பெண்கள் வாங்கியிருந்தால்…

தொழில் தொடங்குவதற்கான பல முக்கிய குணங்கள் உங்களிடம் இருக்கின்றன. ரிஸ்க்கை அளவுடன் ஏற்றுக்கொள்வது, வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது, மாற்றத்துக்கு ஏற்ப செயல்படுவது, நிதியைக் கவனமாகக் கையாள்வது போன்ற அணுகுமுறைகள் உங்களிடம் இருக்கின்றன. மதிப்பெண் அதிகமாக வந்துவிட்டது என்பதற்காக உடனடியாக பெரிய முதலீடு செய்ய வேண்டாம். சந்தையை ஆய்வு செய்து, சிறிய அளவிலான சோதனை முயற்சிக்குப் பிறகே முதலீட்டை அதிகரிப்பது பாதுகாப்பான அணுகுமுறை.

60–74 மதிப்பெண்கள் வாங்கியிருந்தால்…

உங்களிடம் தொழில் தொடங்குவதற்கான ஆர்வமும் சில முக்கிய திறன்களும் இருக்கின்றன. ஆனால், நேரடியாக அதிக முதலீட்டில் இறங்குவதைவிட, முதலில் சிறிய அளவில் தொழிலைச் சோதித்துப் பார்ப்பது நல்லது. முடிந்தால் வேலைக்குச் சென்றுகொண்டே பகுதி நேரத் தொழில், சிறிய அளவில் ஆன்லைன் விற்பனை, வார இறுதி விற்பனை அல்லது சேவைத் தொழில் போன்றவற்றின் மூலம் அனுபவம் பெறலாம்.

50–59 மதிப்பெண்கள் வாங்கியிருந்தால்…

தொழில் தொடங்குவதற்கு முன் இன்னும் சில விஷயங்களில் உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக பண மேலாண்மை, வாடிக்கையாளர் அணுகுமுறை, சந்தை ஆய்வு, போட்டியை எதிர்கொள்வது போன்றவற்றில் அனுபவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஆர்வம் உள்ள துறையில் முதலில் வேலை செய்து அந்தத் தொழிலின் நடைமுறைகளை நேரடியாகக் கற்றுக்கொள்வது உதவியாக இருக்கும்.

50-க்குக் கீழ் வாங்கியிருந்தால்…

தற்போதைய நிலையில் நேரடியாகத் தொழிலில் இறங்குவது உங்களுக்கு சவாலாக இருக்கலாம். இதனால் உங்களால் ஒருபோதும் தொழில் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. உங்களுக்கு ஆர்வம் உள்ள துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றி தொழில் நிர்வாகத்தை நேரடியாகக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் இதே கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள். மதிப்பெண் மாறியிருக்கலாம். அதோடு உங்கள் தொழில் தொடங்கும் திறனும் மாறியிருக்கலாம்.

மாடல் படம்

கடைசியாக ஒரு விஷயம்… இந்த சுய மதிப்பீட்டுத் தேர்வின் நோக்கம் ‘நீங்கள் தொழில் செய்யத் தகுதியானவரா, இல்லையா?’ என்று தீர்வு வழங்குவது அல்ல. ஒருவருக்குப் பொருத்தமானது வேலையாக இருக்கலாம். மற்றொருவருக்குத் தொழில் பொருத்தமாக இருக்கலாம். இன்னொருவருக்கு வேலை செய்துகொண்டே சிறிய அளவிலான சைடு பிசினஸ் செய்வது சரியானதாக இருக்கலாம். அதனால் உங்கள் மதிப்பெண்ணைப் பார்த்து உடனடியாக வேலையை விட்டுவிடுவதோ, பெரிய தொகையைத் தொழிலில் முதலீடு செய்வதோ வேண்டாம்.

இந்த 10 கேள்விகளும் தொழில் தொடங்குவதற்கு முன், உங்களை நீங்கள் எவ்வளவு தயார்படுத்தியிருக்கிறீர்கள், இன்னும் எந்த அளவுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கான தோராயமான உளவியல் மற்றும் சூழல் சார்ந்த கேள்விகளே. மற்றபடி இது எந்த வகையிலும் அறிவியல் ரீதியான தேர்வு அல்ல என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். உங்கள் மனநிலை, பழக்கவழக்கம், ரிஸ்க்கைக் கையாளும் விதம், பண மேலாண்மை, பொறுப்பு உணர்வு மற்றும் தொழில் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு சுயமதிப்பீட்டுத் தேர்வு மட்டுமே இது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *