“நாளையிலிருந்து நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்!”
இந்த ஒற்றை வாக்கியம் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உலகத்தையும் சில நொடிகளில் உலுக்கிப் போட்டுவிடும். மாதச் சம்பளம் நின்றுபோனால் குடும்பத்தை எப்படி நடத்துவது, அடுத்த வேலைக்கு எங்கு செல்வது, EMI கட்ட என்ன செய்வது எனப் பல கேள்விகள் எழும்.
ஆனால், ஒரு நிறுவனம் நினைத்த மாத்திரத்தில் சட்டென உங்களை வெளியேற்றிவிட முடியுமா? அப்படிச் செய்தால் உங்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன?
திடீரென வேலையைப் பறிக்க முடியுமா?
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947-ன் பிரிவு 41-ன்படி, அந்தச் சட்டம் பொருந்தும் கடை அல்லது நிறுவனத்தில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியவரின் சேவையை நியாயமான காரணமின்றி முடிவுக்குக் கொண்டுவர முடியாது.
பொதுவாக, ஒரு மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக ஒரு மாதச் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், விசாரணையில் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட ஒழுங்கீனக் குற்றச்சாட்டு போன்ற விதிவிலக்குகளும் உண்டு.
இந்தப் பிரிவின் கீழ், பணிநீக்கத்தை எதிர்த்து உரிய மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யும் உரிமையும் பணியாளருக்கு உண்டு
வேலையிலிருந்து நீக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்குமா?
தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பு, 2020 (Industrial Relations Code, 2020)-ன் பிரிவு 70, சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள “worker” மீது மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு (retrenchment) நடவடிக்கைக்கான நிபந்தனைகளை விதிக்கிறது.
குறைந்தது ஓராண்டு தொடர்ச்சியாகப் பணியாற்றிய தகுதியுள்ள தொழிலாளருக்கு, பொதுவாக ஒரு மாத எழுத்துப்பூர்வ நோட்டீஸ் அல்லது அதற்கான சம்பளம் வழங்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு முழுமையான பணியாண்டுக்கும் 15 நாட்களின் சராசரிச் சம்பள அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள கூடுதல் பணிக்காலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
உரிய அரசுத் துறைக்கு நோட்டீஸ் அளிப்பதும் அவசியம். இது எல்லா வகையான பணிநீக்கங்களுக்கும் தானாகப் பொருந்தும் என்று நினைக்கக் கூடாது.
பணிநீக்கத்தின் தன்மை, பணியாளரின் பணிப் பொறுப்புகள், பணிக்காலம் மற்றும் சட்டத்தில் உள்ள விதிவிலக்குகள் ஆகியவற்றைப் பொறுத்தே இந்த இழப்பீடு கிடைக்குமா என்பது தீர்மானிக்கப்படும்