ஷூ வாங்க கூட காசில்லாதவருக்கு.. தங்க பூட்ஸ்! உலகக் கால்பந்தின் புதிய ராஜாவான எம்பாப்பே! யார் இவர்? | France vs Morocco World Cup 2026: Who is Kylian Mbappe? The rise of the new King

Spread the love

Sports

oi-Shyamsundar I

நியூயார்க்: கால்பந்து உலகம் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவுக்காகக் காத்திருக்கும்… பீலே, மாரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி எனப் பெரும் ஆளுமைகள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் எல்லாம்.. புதிய ஹீரோ ஒருவர் பிறப்பார். ரிலே ரேஸில் ஒருவர் ரேஸ் முடிந்ததும் இன்னொருவர் ரேஸ் தொடங்குவது போல.. மெஸ்ஸி, ரொனால்டோ ஆளுமைகளின் ஓய்வு நெருங்கும் நேரத்தில்.. கிலியன் எம்பாப்பேவின் எழுச்சி தொடங்கி உள்ளது.

கால்பந்து உலகின் அடுத்த சகாப்தம் யாருடையது? என்ற கேள்விக்கு இன்று ஒற்றைப் பதிலாக உருவெடுத்துள்ளார் பிரான்ஸ் அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் கிளப்பின் நட்சத்திரமுமான கிலியன் எம்பாப்பே!

அடித்து ஆடும் எம்பாப்பே

நேற்று நடந்த மொராக்கோவுக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் 60-வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த அந்த அபார கோல், பிரான்ஸ் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது. அது மட்டுமின்றி, அவரை உலகக் கால்பந்தின் புதிய சிம்மாசனத்தில் அமர வைத்துள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் 20 போட்டிகளில் 20 கோல்கள் அடித்து, லியோனல் மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே மிக நெருக்கமாகத் துரத்தி வருகிறார். விரைவில் முறியடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

France vs Morocco World Cup 2026 Who is Kylian Mbappe The rise of the new King

ஏழை பின்னணியில் இருந்து உலகக் கோப்பை வரை

கிலியன் எம்பாப்பே 1998-ம் ஆண்டு டிசம்பர் 20 பிரான்சின் பாரிஸ் நகருக்கு அருகில் உள்ள பாண்டின் என்ற கிராமப்பகுதியில் பிறந்தார். இவரது தந்தை வில்பிரைட் கேமரூன் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர்.

விளையாட்டுக் குடும்பத்தில் பிறந்த எம்பாப்பேவுக்கு, சிறு வயது முதலே கால்பந்து தான் எல்லாம்! ஆனால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு கடுமையான வறுமை.

வறுமையும் சவால்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தாலும்.. கால்பந்து விளையாடி வளர்ந்த எம்பாப்பே, பிரான்சின் புகழ்பெற்ற கிளயர்போன்டைன் அகாடமியில் சேர்ந்தார். அங்கே சேர நிறைய பணம் வேண்டும், அனுமதிகளும் வேண்டும். ஆனால் இவரோ முழுக்க முழுக்க திறமையை பயன்படுத்தி அந்த அணிக்குள் இணைந்தார்.

அவரது அசுர வேகமும், பந்தை சிறப்பாக பயன்படுத்தும் திறமையும் மொனாக்கோ கிளப் நிர்வாகத்தைக் கவர்ந்தது. 2015-ல் தனது 16-வது வயதில் மொனாக்கோ அணிக்காக அறிமுகமாகி, பிரான்ஸ் அணியில் அப்போது வரை கிங்காக இருந்த தியரி ஹென்றியின் சாதனைகளை முறியடித்தார்.

கிளப் வாய்ப்புகள் வந்தது

அங்கிருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்புக்கு மாறி, பிரான்ஸ் லீக் தொடரில் தொடர்ந்து அசத்தலாக ஆடி.. மொத்த தொடரையும் தனது காலடியில் வைத்திருந்தார்.

ரியல் மாட்ரிட்டில் அசத்தல் ஆட்டம்

பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்குப் பின், ஸ்பெயினின் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் கிளப்பில் அவர் இணைந்தார். மாட்ரிட் அணியில் வினிசியஸ் ஜூனியர், ஜூட் பெலிங்ஹாம் எனப் பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், எம்பாப்பே தனது அசாத்திய திறமையால் தனித்து தெரிய தொடங்கினார்.

அவர் ஆடிய முதல் கிளப் சீசனில் 44 போட்டிகளில் விளையாடி 42 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக, லா லிகா தொடரில் 25 கோல்களை அடித்து, அதிக கோல்கள் அடித்தவருக்கு வழங்கப்படும் பிச்சிச்சி விருதையும் பெற்றார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் 15 கோல்களுடன் கோல்டன் பூட் விருதையும் வென்றுள்ளார்.

உலகக் கோப்பை 2026

கிளப் போட்டிகளில் எம்பாப்பே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால், பிரான்ஸ் தேசிய அணியில் அவர் ஒரு கடவுளாகவே பார்க்கப்படுகிறார்.

2026 உலகக் கோப்பைத் தொடரில் எம்பாப்பேயின் ஆட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. செனகல் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்து கவனிக்கப்பட்டார். அதன் மூலம் பிரான்ஸ் அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஒலிவியர் ஜிரூடின் (57 கோல்கள்) சாதனையை முறியடித்து, பிரான்சின் டாப் ஸ்கோரராக உருவெடுத்தார்.

இந்த நடப்பு உலகக் கோப்பையில் மட்டும் இதுவரை 8 கோல்களை அடித்து மெஸ்ஸியுடன் தங்க பூட்ஸ் போட்டியில் முதலிடத்தில் உள்ளார். 2022 உலகக் கோப்பையிலும் 8 கோல்கள் அடித்த எம்பாப்பே, இரண்டு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் 8 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியில் வினிசியஸ், பெலிங்ஹாம் போன்ற பல நட்சத்திரங்களுக்கு நடுவே எம்பாப்பே தன்னை தனியாக காட்டிக்கொள்ள கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை எம்பாப்பே தான் கிங்.. கிங் மேக்கர் எல்லாமே!

மெஸ்ஸி 31 உலகக் கோப்பை போட்டிகளில் 21 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் எம்பாப்பே வெறும் 20 உலகக் கோப்பை போட்டிகளிலேயே 20 கோல்களை எட்டிவிட்டார். இன்னும் 27 வயதே ஆகும் எம்பாப்பே, கால்பந்து வரலாற்றின் அனைத்து உலகக் கோப்பை சாதனைகளையும் உடைப்பது உறுதி என்று வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.

வேகம், துல்லியம், எந்த மோசமான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாத மனநிலை.. இதுதான் இவரை மற்ற வீரர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. சிறு வயதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போஸ்டர்களைத் தனது அறையில் ஒட்டி வைத்து வளர்ந்த ஒரு சிறுவன், இன்று உலகக் கால்பந்தையே தனது காலடியில் வைத்துள்ளார்!

நேற்று மொராக்கோவுக்கு எதிரான வெற்றி பிரான்ஸ் அணியை மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையின் இறுதிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது. மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் சகாப்தம் முடிவுக்கு வரும் இந்த வேளையில், கால்பந்து உலகின் புதிய பேரரசனாக, உலகக் கோப்பையின் புதிய நாயகனாக கிலியன் எம்பாப்பே சிம்மாசனம் ஏறியுள்ளார்!

The New King Has Arrived!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *