தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென வியட்நாமிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டது தேசிய அரசியலில் ஹாட் டாக் ஆக மாறியது.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தி.மு.க. எம்.பி கனிமொழி மூலமாக மு.க.ஸ்டாலினை சமாதானப்படுத்த சோனியா காந்தி மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அவரின் ஃபாரின் டூர் அமைந்துவிட்டதாக தற்போது கசியும் தகவல்தான் அதிர்ச்சி ரகம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கடந்த அக்டோபர் 18ம் தேதி திடீரென வியட்நாமுக்கு புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த பயணம் குறித்து சோனியாக காந்தி, பிரியங்கா காந்திக்கு கூட தகவல் தெரிந்திருக்கவில்லை என்கிறார்கள். நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் டெல்லி திரும்பிய பிறகும்கூட அவரின் ரகசிய பயணம் குறித்து டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் கிண்டலடித்து வருவதுடன், காந்தி குடும்பத்திற்குள் உள்ள மோதலையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
அதாவது, பிரியங்காவின் மகனும் புகைப்படக் கலைஞருமான ரைஹான் ராஜீவ் வத்ரா, டெல்லியில் உள்ள பிகானேர் மாளிகையில் தனது போட்டோக்களை வைத்து புகைப்படக் கண்காட்சியை நடத்தினார். இதில், இடம்பெற்றிருந்த டெல்லி எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரியங்கா, பா.ஜ.க. அரசு மீது குற்றம்சாட்டினார். ஆனால், இதுதொடர்பாக ராகுல் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இதை சுட்டிக்காட்டும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறி கிண்டல் அடித்தார்கள்.
ஆனால், பிரியங்காவுடன் மட்டுமல்ல, சோனியா காந்தி மீதும் ராகுல் கோபாமாக இருக்கிறார். தாய் மற்றும் சகோதரி மீதான ராகுலின் கோபத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி தான் காரணம் என கூறி அதிர்ச்சி தருகிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள் சிலர். இதுகுறித்து அவர்கள் உடைத்து பேசினார்கள்.
“கடந்த வாரத்திற்கு முன்பு ஒருநாள் சோனியா காந்தியிடம் இருந்து கனிமொழிக்கு நேரடி அழைப்பு வந்திருக்கிறது. நட்பின் பேரில் வந்த அழைப்பு அது. அதன்பேரில் சோனியா வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார் கனிமொழி. அப்போது அங்கு பிரியங்கா, ராகுல் ஆகியோரும் இருந்திருக்கிறார்கள். அந்த சந்திப்பின்போது மிக எமோஷனலாக இருந்த சோனியா காந்தியும், பிரியங்காவும் கனிமொழியுடன் உருக்கமாக பேசியிருக்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறியதற்கு வருத்தம் தெரிவித்த இருவரும், ‘தவெகவை நம்பி சென்று தவறிழைத்துவிட்டோம். மீண்டும் கூட்டணி வைக்க விருப்பமில்லாவிட்டாலும், பழைய நட்புடன் செயல்பட விரும்புகிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும், அங்கிருந்த ராகுல் எதுவும் பேசவில்லை.
சோனியாவுக்கு பதிலளித்துப் பேசிய கனிமொழி, ‘மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்றோ, நட்புடன் செயல்படலாம் என்றோ எங்கள் அண்ணன் ஸ்டாலினை இனி கன்வின்ஸ் பண்ண முடியாது. துரோகத்தை நாங்கள் யாருமே மன்னிக்கவோ, மறக்கவோ தயாராக இல்லை. அதற்கான காலம் முடிந்துவிட்டது. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி, அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் திமுகவை சீண்டும் வகையில்தான் தொடர்ந்து பிரியங்கா பேசிக்கொண்டிருக் கிறார்கள். காங்கிரஸும். தி.மு.கவும் இணைவதால் ஏற்படும் பலம் என்னவென்று பாஜகவுக்குத் தெரியும் அப்படியிருந்தும் பாஜக இதைத் தடுக்க முயல்வதைவிட, ராகுலின் ஆதரவாளர்கள் தான் இதனை மும்முரமாக தடுத்துவருகிறார்கள். அதனால், இனி இதுபற்றிப் பேசுவது எதற்கும் உதவாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சோனியா, ‘எஸ்.ஐ.ஆருக்கு எதிரான காங்கிரஸின் தேசிய அளவிலான போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு கொடுக்காததை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வருத்தத்துடன் பதிவு செய்தார். தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றிவிட்டால் வட இந்தியாவில் பாஜக மேலும் வலுவடையும். தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் இருப்புத்தன்மையும் அதிகமாகிவிடும். எனவே, இம்மசோதாவை ஆதரிப்பது குறித்தும் மறுபரிசீலனை செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட கனிமொழி, ‘அண்ணனிடம் பேசிப் பார்க்கிறேன் என சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கிறார். எனினும், இச்சந்திப்பு ராகுல் காந்திக்குப் பிடிக்கவில்லை. கனிமொழி மூலமாக ஸ்டாலினை சமாதானப்படுத்தும் முயற்சியை ராகுல் ரசிக்கவில்லை. அந்தக் கோபத்தில்தான் தன் தாய், சகோதரியிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் திடுதிடுப்பென வியட்நாம் நாட்டிற்கு ராகுல் புறப்பட்டு சென்றிருக்கிறார். சோனியாவுக்கு நெருக்கமான மூத்த தலைவரே எங்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்” என்றார்கள்.
கனிமொழியின் சந்திப்பு குறித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது, “சோனியாவுடன் சந்திப்பு நடந்ததா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எதிர்பாராத விதமாக சந்தித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலரைத் தவிர, மல்லிகார்ஜுன கார்கே உட்பட உண்மையான காங்கிரஸார் அனைவரும் த.வெ.க.வுடனான கூட்டணி விரும்பவில்லை. திமுக தான் அவர்களுக்கான விருப்பம். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், நாங்கள் அதை உணர்கிறோம். இதுவே ராகுல் காந்திக்கான ஒரு அலாரம் தான்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் கருத்தறிய அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான கிறிஸ்டோஃபர் திலக்கை தொடர்புகொண்டோம். “அச்சந்திப்பு குறித்தோ, காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக ஆதரவு மனநிலையில் இருப்பது குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது” என்பதோடு முடித்துக்கொண்டார்.
ஹிஸ்ட்ரி ரிப்பீட்ஸ் இட்செல்ஃப்!

