ஸ்டாலின் Vs திருமாவளவன்… திருச்சி கிழக்கில் போடப்படும் ‘மெகா’ கணக்கு? – Kumudam

Spread the love

தமிழ்நாடு அரசியலில் இடைத்தேர்தல் என்றாலே கட்சிகளுக்கு ஒரு தனிக் கணக்கு இருக்கும். யாரை வேட்பாளராக நிறுத்துவது, யாரை எதிர்த்து யாரைக் களமிறக்குவது, யாருடைய செல்வாக்கைச் சோதிப்பது எனப் பல கணக்குகள் ஓடும். அந்தவகையில், அண்மையில் நடந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக போட்ட கணக்குகள் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது என்றே சொல்ல வேண்டும். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் அபார வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெற்றி பெற்றிருந்தாலும் பெரிய அளவில் இல்லை. அதேபோல், அதிமுகவுக்கே செல்வாக்கு அதிகம் என்ற நிலையில், அதிமுக 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுகவிற்கு செல்வாக்கே இல்லை என்ற நிலை மாறி, 2 தொகுதிகளிலும் 2 ஆவது இடத்தை பெற்று அதிமுகவிற்கு ஷாக் கொடுத்தது.

இப்போது திருச்சி கிழக்குத் தொகுதியைச் சுற்றியும் அப்படியொரு அரசியல் கணக்கு பேசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபக்கம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், ஸ்டாலின் களமிறங்கினால் அவரை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தவெக கூட்டணி வேட்பாளராக நிறுத்துவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் வேட்பாளர் தேர்வே பாதி தேர்தல் வேலை என்று சொல்லப்படுவதுண்டு. அப்படியிருக்க, ஸ்டாலின் Vs திருமாவளவன் என்ற போட்டி உருவாகுமா என்ற கேள்வியே இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

ஸ்டாலினை ஏன் களமிறக்க வேண்டும்?

திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை தி.மு.க. எப்படிப் பார்க்கிறது என்பதுதான் இப்போதைய கேள்வி. கட்சியின் தலைவர் ஸ்டாலினையே வேட்பாளராக நிறுத்தினால், அது தொகுதிக்கான தேர்தல் என்பதைத் தாண்டி மாநில அளவிலான அரசியல் கவனத்தை ஈர்க்கும் போட்டியாக மாறும்.

ஸ்டாலினைக் களமிறக்க வேண்டும் என்று கே.என். நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால், கட்சித் தலைவரே நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்கும் சூழல் உருவாகும்.

திருமாவளவனை நிறுத்த விஜய் திட்டமா?

ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து யாரைக் களமிறக்கலாம் என்ற கேள்விக்கும் தவெக தரப்பில் ஆலோசனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், விசிக தலைவர் திருமாவளவனைத் தவெக கூட்டணி வேட்பாளராக நிறுத்துவது குறித்த யோசனையும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமாவளவன் போன்ற மாநில அளவில் அறியப்பட்ட அரசியல் தலைவரை ஒரு தொகுதியில் நிறுத்துவது என்பது சாதாரண வேட்பாளர் தேர்வு அல்ல. அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால், திருச்சி கிழக்குத் தொகுதியின் தேர்தல் விவாதம் மாநிலம் முழுவதும் கவனம் பெறலாம். 

ஏற்கனவே, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக திருமாவளவன் கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போது அறிவித்திருந்தார். ஆனால், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, அம்முடிவை திரும்பப் பெறுவதாக அவரே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கிழக்கு… அரசியல் கணக்குகளின் மையமா?

ஸ்டாலின் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டால், தி.மு.க. தனது தலைவரை நேரடியாகக் களமிறக்கும் முடிவை ஏன் எடுத்தது என்ற விவாதம் எழும். அதேபோல், திருமாவளவனை எதிர் வேட்பாளராக நிறுத்தும் முடிவைத் தவெக எடுத்தால், அதன் பின்னணியில் என்ன அரசியல் கணக்கு இருக்கிறது என்ற கேள்வியும் எழும்.

தமிழ்நாடு அரசியலில் ஒரு காலத்தில் தொகுதிப் பங்கீட்டுக்காகப் பேசப்பட்ட பெயர்கள், இன்று வேட்பாளர் தேர்வுக்கான சாத்தியக்கூறுகளாகப் பேசப்படுகின்றன. 

அறிவிப்பு வருமா… அரசியல் கணக்கு மாறுமா?

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிடுவாரா? அவருக்கு எதிராகத் திருமாவளவனை நிறுத்தும் யோசனை உண்மையிலேயே தவெக தரப்பில் இருக்கிறதா? இரு கட்சிகளின் தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது?

இப்போதைக்கு இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றாலும், இந்த தகவல்களால் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் புதிய உற்சாகத்தில் இருக்கின்றனர்.
 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *