எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஸ்ரீவைகுண்டத்தில் விஜயின் ரசிகை ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது .
ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் “யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். ‘தனிமனித ஒழுக்கம்’ பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது – பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?.
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய்க்கு உதயநிதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

