Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் திலக் வர்மாவை கொண்டு வர பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிடில் ஆர்டரில் ஸ்பின் பவுலிங் செய்து 4 முதல் 5 ஓவர்களை வீசக் கூடிய பேட்ஸ்மேன் தேவை என்பதால், திலக் வர்மாவை அணிக்குள் கொண்டு வர கம்பீர் ஆலோசிப்பதாக தெரிகிறது.
2027ஆம் ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. ஏற்கனவே கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றாலும் தேவையான மாற்றங்களை பிசிசிஐ தேர்வுக் குழு மேற்கொண்டு வருகிறது. ஸ்பின்னர்களை கண்டறிய முயற்சித்து வருகின்றன.

ஜடேஜாவின் இடத்தில் விளையாட அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தயார் செய்து வருகிறது. மறுமுனையில் பும்ரா, சிராஜ் ஆகியோரை தொடர்ந்து அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு அளித்து வருகிறார்கள். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக நிதிஷ் ரெட்டியை வளர்த்து வருகிறார்கள்.
இருப்பினும் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது. இதனால் ஒரேயொரு ஸ்பின்னர் தான் பிளேயிங் லெவனில் விளையாட முடியும். அதனால் பேட்ஸ்மேன்கள் யாரேனும் ஸ்பின்னில் 4 முதல் 5 ஓவர்கள் வீசினால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. குறிப்பாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் ஸ்பின்னராக செயல்பட முன் வர வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன் ஆகிய 6 பேரில் யாரும் பவுலிங் செய்ய மாட்டார்கள். இதனால் டாப் 5 வரிசையில் ஸ்பின்னராக செயல்படக் கூடிய இடதுகை பேட்ஸ்மேனான திலக் வர்மாவை அணிக்குள் கொண்டு வர கம்பீர் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் இருக்கும் சூழலில், அந்த இடத்தில் திலக் வர்மாவை விளையாடலாம் என்று கம்பீர் நினைப்பதாக தெரிகிறது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஓய்வில் இருந்த போது, ருதுராஜ் கெய்க்வாட் அந்த இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருந்தார். இருப்பினும் அடுத்த தொடரிலேயே ருதுராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
திலக் வர்மா இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பெரிதாக விளையாடியதே கிடையாது. அப்படி இருக்கையில் ஓராண்டுக்குள் ஒருநாள் கிரிக்கெட்டின் சூட்சமத்தை திலக் வர்மாவால் புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
