International
oi-Mani Singh S
மஸ்கட்: ஹார்முஸ் ஜலசந்தியில் 5 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குவைத் நாட்டு கொடியுடன் எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த எம்.டி கசிமா III என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கப்பல் தீ பற்றி எரிந்த நிலையில், கப்பலில் பணி செய்து வந்த ஐந்து இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஈரான் – அமெரிக்கா போரால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் முன் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தி வருகிறது.

இன்னொரு பக்கம் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க முற்றுகையிட்டு இருப்பதால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தொடர்ந்து அசாதாரண சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே, குவைத் நாட்டு கொடியுடன் எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த எம்.டி கசிமா III என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கப்பல் தீ பற்றி எரிந்த நிலையில், கப்பலில் பணி செய்து வந்த ஐந்து இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த தகவலை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:- ஹார்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான குவைத் நாட்டுக் கொடியுடன் சென்ற MT Kazimah III எண்ணெய் கப்பலில் இருந்த 5 இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட 5 இந்தியர்களும் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்கு ஆதரவு அளித்த ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டு கொடியுடன் சென்ற அந்த கப்பல் டோகோவில் உள்ள லோமே துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. பாரசீக வளைகுடா உள்பட பிற முக்கிய வழித்தடங்களில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக தீவிர கண்காணிப்பில் இந்திய வெளியுறவுத்துறை தற்போது மேற்கொண்டு வருகிறது. மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா அங்குள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் இந்திய மாலுமிகள் மீட்பு பணி துரிதமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்களில் சுமார் 4,500 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அண்மையில் தெரிவித்து இருந்தது. ஐக்கிய நாடுகள் அவையின் 81-வது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்த விவகாரம் குறித்து இந்தியாவின் கவலையை எடுத்துரைத்தார். வளைகுடா மற்றும் செங்கடல், கருங்கடல் பகுதிகளில் வணிக கப்பல்கல் மீது தாக்குதல் நடத்தப்படுவது, இந்தியர்கள் உயிரிழப்பதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று கூறியிருந்தார்.