“ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கிறோம்.. ஆனால்?” அமெரிக்காவிடம் நிபந்தனைகள் வைத்த ஈரான்! – Kumudam

Spread the love

அமெரிக்கா தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், உலக அளவில் மிக முக்கியமான கடல் வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு நாட்களில் மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் புதிய திட்டம்

முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கு ஒரு வார காலம் ஆகும் என ஈரான் கூறியிருந்த நிலையில், தற்போது அந்த கால அளவை இரண்டு நாட்களாகக் குறைத்துள்ளது. இதுகுறித்து ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் பேசுகையில், “எங்களது இந்த முடிவு ஈரானின் நல்லெண்ணத்தைக் காட்டுகிறது. ஈரான் வைக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், குறுகிய காலத்தில் ஹார்முஸ் பாதையில் பாதுகாப்பை மீட்டெடுத்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும்” என்று தெரிவித்தார். மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அனைத்தும் அமெரிக்காவின் முடிவிலேயே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் நிபந்தனைகள் என்ன?

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், தன் அனுமதி இன்றி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவும் ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகை விதித்துள்ளது.

இந்நிலையில், ஹோர்முஸ் பாதையைத் திறக்க ஈரான் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

1) மத்திய கிழக்கில் நடைபெறும் போரை அனைத்து முனைகளிலும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

2) வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவிக்க வேண்டும்.

3) ஈரானிய எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்கி, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை விலக்க வேண்டும்.

4) ஓமன் மற்றும் ஈரான் ஒப்புக்கொண்ட புதிய கடல் வழிப்பாதையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5) பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

அமெரிக்கா எச்சரிக்கை – ஈரான் பதிலடி

சமீபத்திய மாதங்களில் ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதோடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி மையம் எனக் கருதப்படும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பாகாய், “ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு ராணுவத் தாக்குதலுக்கும் எங்களது தரப்பிலிருந்து உடனடி, சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *