இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது…
“நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே சென்று கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் ஜூன் 26 அன்று ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
வணிகக் கப்பல்கள் மீது ஈரான் படைகள் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலானது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.
அதுமட்டுமின்றி, மிக முக்கியமான சர்வதேச வர்த்தகப் பாதையான இப்பகுதியில் வணிகப் போக்குவரத்து அதிகரித்துவரும் வேளையில், ஈரானின் இத்தகைய ஆபத்தான நடவடிக்கை கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் சீர்குலைத்துள்ளது”.
ஈரானின் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒரே வழியில் சென்று தாக்கும் குறைந்தது நான்கு டிரோன்களை ஏவித் தாக்கியுள்ளது.
இதில் ஒரு டிரோன், மிகப்பெரிய மற்றும் மிக அதிக மதிப்புமிக்க சரக்குக் கப்பல் ஒன்றின் மேல் தளத்தை பலமாகத் தாக்கியுள்ளது.
இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும், அது தொடர்ந்து தனது பயணத்தைத் தொடர முடிந்தது.
மற்ற மூன்று டிரோன்களை எங்கள் படைகள் சுட்டு வீழ்த்திவிட்டன.
மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இது இருதரப்புக்கும் இடையே இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஒரு முட்டாள்தனமான செயலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.