ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்காவுக்கு இனி அரபிக்கடல் பகுதிக்கு அப்பால் முன்னேறுவதற்கான துணிவு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் விவகாரம் குறித்து கமேனி கருத்து :
ஈரானின் போராளிகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்புப் படைகள் எதிரிகளின் நடவடிக்கைகளை முறியடித்துள்ளதாக மொஜ்தபா கமேனி கூறியுள்ளார். இதன் காரணமாக அமெரிக்கா தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க தயங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரபிக்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து, அங்கிருந்து அவர்களின் இருப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கமேனி குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கருத்துகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்திக்கு புதிய பெயர் சூட்டுவது தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரான் உரிமை கோரல் :
உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
ஈரானிய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், வெளிநாடுகளின் எந்தவொரு அறிவிப்புகளும் அல்லது கோரிக்கைகளும் ஹார்முஸ் ஜலசந்தியின் நிலையை மாற்ற முடியாது என்றும், அதன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை ஈரான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஹார்முஸ் கிழக்கு பகுதி மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஈரானிய கடற்படை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஈரானின் முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப் :
அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை குறைத்து, துறைமுகங்கள் மீதான அழுத்தத்தை நீக்கியால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியும் என ஈரான் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த முன்மொழிவை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். அதே நேரத்தில், எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள ஈரான் பிரதிநிதிகள், அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தைகளுக்கான எந்த திட்டமும் தற்போது இல்லை என்று ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் தகவல் :
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா நீருக்கடிப் பயண வாகனம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் MK 18 MOD 2 KINGFISH எனப்படும் மேம்பட்ட நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா வாகனம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கருவி சோனார் தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான வழிசெலுத்தல் வசதிகளுடன் செயல்படும் திறன் கொண்டது என்றும், பல மில்லியன் டாலர் மதிப்புடைய தொழில்நுட்ப சாதனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் மோதல் அதிகரிக்கும் சூழல் :
ஹார்முஸ் ஜலசந்தி உலகளவில் எரிசக்தி போக்குவரத்துக்கு முக்கியமான கடல் பாதையாக இருப்பதால், அங்கு ஏற்படும் எந்தவொரு பதற்றமும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.
மொஜ்தபா கமேனியின் கருத்துகள், ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை காட்டுவதாகவும், அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

