உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற டேக்வாண்டோ (Taekwondo) வீராங்கனை ஒருவர், சர்வதேசப் போட்டியில் பங்கேற்க ரூ.1.5 லட்சம் தேவைப்பட்டதால் செல்ல முடியவில்லை என்று கூறிய காணொளி (Video) சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து வீராங்கனையிடம் லஞ்சம் கோரப்பட்டதாக அரசியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்த வீராங்கனையே தற்போது அளித்துள்ள விளக்கம் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
ஆகஸ்ட் 10-ஆம் தேதி, டேராடூனில் நடைபெற்ற “முதலமைச்சர் – இளம் மாணவர்கள் மந்தன்’ (Mukhyamantri Yuva Vidyarthi Manthan) நிகழ்ச்சியில், 12-ஆம் வகுப்பு மாணவியும் தேசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையுமான ஷைரா, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது சிக்கலை முன்வைத்தார்.
ஜம்முவில் நடைபெற்ற தேசிய போட்டியில் வெற்றிபெற்று சர்வதேசப் போட்டிக்குத் தேர்வானதாகவும், ஆனால் ரூ.1.5 லட்சம் நிதியைத் திரட்ட முடியாததால் அந்த வாய்ப்பை இழந்ததாகவும் கூறிய அவர், பேசிக்கொண்டிருந்தபோதே உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இதையடுத்து முதல்வர், அவரது விவரங்களைச் சேகரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சர்ச்சை உருவானது எப்படி?
இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சர்வதேசப் போட்டிக்குச் செல்ல ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாகக் குற்றம் சாட்டின. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியை அரசுத் தரப்பு சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், மாநில விளையாட்டுத்துறை மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்துக் கேள்விகள் எழுந்தன.