Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
கள்ளக்குறிச்சி: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் வரை எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை நடத்தி இருக்கிறார். இந்த விசாரணையின் போது புகார் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று காலை திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி வந்த எஸ்பி சிருஷ்டி சிங், முதற்கட்டமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை பெற்று கொண்டார். மறுபக்கம் விசாரணைக்கு ஆஜராக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஷ்வரி நேரில் சென்று சம்மன் கொடுத்துள்ளார். கச்சிராயப்பாளையத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்று சம்மன் அளிக்கப்பட்டுள்ளதால், அவரிடம் இன்றே விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங், முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் எஸ்பி சிருஷ்டி சிங் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அடுத்தக் கட்டமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின் அருள் விக்னேஷிடம் நேரடி விசாரணை தொடங்கும் என்று கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட விசாரணை அறிக்கைகளை மட்டும் சுமார் 4 மணி நேரம் ஆய்வு செய்திருக்கிறார். இதன் பின்னரே எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணையை தொடங்கியுள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்படுவாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
