100 ஆண்டுகள்… மக்களின் நம்பிக்கையில் செஞ்சுரி அடித்த `லயன் பஸ்' கம்பெனி!

Spread the love

திருச்செந்தூர் ரூட்டில் இருந்து திருநெல்வேலிக்கு பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் அலுவலர்கள் என்று அனைவரின் மத்தியிலும் பிரபலமாக வலம் வரும் லயன் பஸ், இந்த ஆண்டோடு செஞ்சுரி அடிக்கிறது. மிகவும் பெரிய பாரம்பரியத்தையும் சாதனை வரலாற்றையும் கொண்ட லயன் பஸ் கம்பெனியை நடத்தி வருவது, எம். ரமணி, மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் வி. சோமசுந்தரம் , எஸ். லக்ஷ்மணன் ஆவார்கள்.

லயனுடைய வெற்றிக் கதையை நம்முடன் பகிர்கிறார், எம். ரமணி,

‘தமிழ்நாட்டில் மிகப் பழமையான பேருந்து…..’

” திருநெல்வேலியில் 1919 ஆம் ஆண்டில் லயன் பஸ் கம்பெனி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகப் பழமையான பேருந்து நிறுவனம் எது என்று கேட்டால் லயன் பஸ்ஸை தான் கூறுவார்கள். இதை நாங்கள் கடவுளுடைய பெரிய பாக்கியமாக கருதுகிறோம்.

எங்களுடைய தாத்தா எம். சோமசுந்தரம்பிள்ளையும் அவர்களுடைய மாமா திரு . சண்முகப்பிள்ளை அவர்களும் சேர்ந்து இந்தத் தொழிலை முதன்முதலில் தொடங்கி வைத்தார்கள். இப்போது சொல்லக்கூடிய திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் எங்களுடைய பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. இன்றைக்கு நாங்கள் மூன்றாவது தலைமுறையாக 20 பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

அப்பொழுது எங்களுடைய பேருந்துகள் நிலக்கரி மற்றும் பெட்ரோலில் இயங்கிக் கொண்டிருந்தன. இப்பொழுது நாங்கள் பயன்படுத்துவது டீசல் மட்டும் தான். எங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகள் சென்றபோதிலும் எங்களுக்கு இந்த தொழிலை கைவிட மனதில்லை.

‘எங்களுடைய தொழில் தாரக மந்திரமே…’

எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு சொல்லி கொடுத்த தொழில் தாரக மந்திரமே, அரசாங்க விதிகளின்படியே தொழிலை நடத்த வேண்டும், மக்கள் சேவையை மனதில் கொண்டு நடத்த வேண்டும், நல்ல பயணப் பாதுகாப்பு வேண்டும் .இந்த மூன்றையும் நாங்கள் இன்றுவரை கடைபிடிக்கின்றோம்.

எங்களுடைய வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருந்ததே டி.வி.எஸ் நிறுவனங்கள் தான். அதற்குப் பிறகு எங்களுடைய பயணிகள் தான் எங்களுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள். எத்தனையோ போட்டிகளையும் தாண்டி லயன் பஸ் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது என்றால் அதற்கு எங்கள் பேருந்துகளில் விரும்பி ஏறும் பயணிகள் தான் காரணம். நேரம் தவறாமல் செல்வது, ஃப்ரீ வைஃபை போன்று பயணிகளுக்கு ஏற்ப சேவை செய்வது, பாதுகாப்பான பயணத்தை அளிப்பது போன்றவை தான் எங்களுடைய பயணிகள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்குக் காரணம் என்போம்.

வரும் காலங்களில் மின்சாரப் பேருந்துகள்…

அதுமட்டுமல்லாமல், எங்கள் பேருந்துகளில் இருக்கக்கூடிய அனைத்து பணியாளர்களும் மிகச்சரியாக இந்தப் பணியை செய்வதனால் மட்டுமே எங்களால் இந்த அளவிற்கு உயர முடிந்தது.

அரசாங்கம் தொழிலாளர்களுக்கு என்னவெல்லாம் சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்ததோ அதை அனைத்தையுமே ஒன்று விடாமல் எங்கள் பணியாளர்களுக்கு செய்து வருகிறோம். கிராமப்புறங்களில் கூட இருசக்கர வாகனங்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். பல மினி பஸ்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன . கொரோனா காலகட்டங்களிலும் பல சிக்கல்களை சந்தித்து அதில் இருந்து மீண்டு வரவே இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. இவ்வளவு சவால்களையும் தாண்டி எங்களுடைய பேருந்தில் இன்றளவிலும் நிரந்தர பயணிகளும் இருக்கின்றனர்.

வரும் காலங்களில் மின்சாரப் பேருந்துகள் கொண்டு வருவதைப் பற்றியும் நாங்கள் சிந்தித்து வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல், போக்குவரத்து என்றுமே வளர்ச்சி அடையக்கூடிய தொழில் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கல்வி, வேலை, சுற்றுலா என்று ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் தங்களின் வாழ்வில் பயணம் செய்து கொண்டே தான் இருப்பார்கள். மக்கள் பயணம் ஒருபோதும் நிற்கப்போவதில்லை. அதுபோலத்தான் இந்த லைன் பஸ்ஸின் பயணமும் …. மக்களுக்காக என்றுமே எங்களுடைய சேவை இருந்து கொண்டே இருக்கும்.” என்று கூறி புன்முறுவலுடன் பேட்டியை நிறைவு செய்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *