மகிஜானிக்கு சொந்தமான “கேண்டர் குரூப் V LLC’ என்ற நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, நிலங்களை அடிப்படையாகக் கொண்ட கடன்களை உருவாக்க அல்லது வாங்க, வங்கி சுமார் 100 மில்லியன் டாலர்களை கேண்டர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கேண்டர் நிறுவனம், அந்த கடன்களையும் அதன் அடிப்படை சொத்துக்களையும் வங்கிக்கு ஈடாக வைத்து, கடன் வருவாயிலிருந்து வங்கிக்கான தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், செப்டம்பர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை, மகிஜானி போலியான உரிமை காப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்து, சில சொத்துக்களின் மீது தனது நிறுவனத்திற்கே முதல் பற்றுரிமை (first lien position) இருப்பதாக வங்கியை நம்ப வைத்துள்ளார்.
போதை விருந்துகள், ஆள் கடத்தல், கொலை மிரட்டல்!
பணம், அதிகாரம், மிரட்டல்… மகிஜானியின் சாம்ராஜ்யம் குற்றத்தின் நிழலில்தான் கட்டமைக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்புகின்றன நீதிமன்ற ஆவணங்கள். இந்த மோசடி மட்டுமல்லாமல், மகிஜானி மீது அடுக்கடுக்கான பல பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் பங்கேற்ற தனிப்பட்ட விருந்துகளை இவர் நடத்தியதாகவும், இந்த விருந்துகளில் சில வங்கி ஊழியர்களும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இந்த விருந்துகளில் நடந்த நிகழ்வுகளை வைத்து அவர்களை ‘பிளாக்மெயில்’ செய்து, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி, தனது கீழ் பணிபுரிபவர்களை “கொன்றுவிடுவேன்” என்றும், “உங்கள் குடும்பத்தை தெருவில் நிறுத்துவேன்” என்றும், “உங்கள் பிள்ளைகளை அரசின் நலத்திட்டங்களில் வாழ வைப்பேன்” என்றும் கொடூரமாக மிரட்டியதாக ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், ஆயுதம் ஏந்திய அடியாட்களைப் பயன்படுத்தி தெற்கு கலிபோர்னியாவின் முக்கிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஒரு உணவகத்தை கைப்பற்றியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.