மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்களும் தனி அணியாக பிரிந்து செல்ல தொடங்கி இருக்கின்றனர். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருப்பதால் அதிருப்தி கோஷ்டிக்கே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் கிடைக்கும் அபாயம் இருக்கிறது.
மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான தலைவர்கள் கூட இப்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். இதனால் இந்த நேரத்தில் அவருக்கு கைகொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு சோனியா காந்தியுடன் நெருக்கம் காட்டினார்.
ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகை கட்சி போன்று நடத்திய மம்தா பானர்ஜி பா.ஜ.கவுடனும் கூட்டணி வைத்தார். ஆனால் இப்போது மீண்டும் காங்கிரஸ் துணை அவருக்கு தேவையாக இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸோடு இணைக்க பேச்சுவார்த்தை?
மம்தா பானர்ஜி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்ற தகவலும் பரபரக்கிறது.
இதில் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைப்பது அல்லது காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமான கூட்டணியை வைத்துக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை அமைந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இணைப்பு பேச்சுவார்த்தையை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இணைப்பு பற்றி பேசவில்லை என்றும், ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து மட்டுமே பேசினோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்க பதிவில், `சோனியா மற்றும் மம்தா இடையேயான சந்திப்பில் என்ன நடந்ததாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை. சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது மற்றும் நீண்ட உறவை கருத்தில் கொண்டு பல தனிப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டன” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.