
தவெக… 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர, ஆட்சிக் கட்டிலில் ஏறும் அளவிற்கெல்லாம் சக்திவாய்ந்தது கிடையாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், கருத்துக் கணிப்புகள், ஊடகங்கள் என அனைத்து கூறின. ஆனால், அனைத்தையும் தவிடுப்பொடியாக்கி, இருபெரும் திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டி அவர்களின் கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றி, விஜய் என்ற ஒற்றை நபரால் ஏற்பட்டாலும், ஆளுங்கட்சியாக இருந்த திமுக மீதான வெறுப்புணர்வும், தலித்துகளுக்கு எதிரான பிரச்னைகளை தீவிரமாக கையாளததும், வாரிசு அரசியலும், கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பும், அசுர வளர்ச்சி பெற்ற போதைப் பொருள் கலாச்சாரமும் தான் என்பதே களநிலவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
சரி, திமுகவின் செயல்பாட்டால் அதிருப்தியில் இருந்தவர்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று யோசித்தால், அங்கு நிலைமையே வேறு. அதிமுக என்பது திமுகவிற்கு மாற்று என்று பார்க்கப்பட்டாலும், அது ஆண்ட 10 ஆண்டுகள் நீட் சர்ச்சை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், பாஜக ஆதரவு நிலைப்பாடு என தமிழ்நாட்டை ஒருவழி செய்துவிட்டுத்தான் சென்றது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமா? அதிமுக என்பது பாஜகவின் பி டீம் போலத்தான் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, இப்படி திமுக Vs அதிமுக என்றிருந்தால் நிச்சயம், திமுக ஆட்சியே தொடர்ந்திருக்கும். ஆனால், திமுக Vs அதிமுக Vs தவெக என களம் மும்முனையாக இருந்ததால், மக்கள் ஒரு வாய்ப்பை தவெகவிற்கு வழங்கியது இயல்பான ஒரு விஷயமே. மக்கள் திமுகவையோ, அதிமுகவையோ புறக்கணிக்கவில்லை, மாறாக அவர்கள் மாற்றத்திற்காக மாற்று சக்தியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை தவெகவும் திராவிட கட்சிகளைப் போலவே செயல்பட்டால், அதற்கும் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
களநிலவம் இப்படி இருக்க, இதனை நன்குணர்ந்துள்ள தவெக, ஒருவேளை நாம் தவறே செய்தாலும், நமக்கான மாற்று சக்தியாக வேறு யாரும் இருந்துவிடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாகவும், அதற்கான காய்களைத் தான ஆட்சிப் பொறுபேற்றதில் இருந்து தவெக கனக்கச்சிதமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதற்கேற்றார்போல், முதல் பலி ஆடாக சிக்கிச் சின்னாப்பின்னமாகிக் கொண்டிருக்கிறது அதிமுக என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். தவெக வெற்றிப் பெற்றதும் திமுக மீதே அதன் பார்வை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல், திமுகவிற்கு முன்னர் அதிமுக கூடாரத்தை காலி செய்துவிடலாம் என்று விஜய் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. மாஜிக்களை இழுத்துவிட்டால் போதும், அவர்களின் ஆதரவாளர்களும் ஆட்டோமெட்டிக்காக பின்னாடியே வந்துவிடுவார்கள் என்று, அதிமுக மாஜிக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு வருகிறது தவெக, அதன்காரணமாக, அதிமுகவில் இருந்து தவெகவிற்கு கொத்துக் கொத்தாக ரத்தத்தின் ரத்தங்கள் படையெடுத்து வருகின்றனர். இப்படியே சென்றால், எம்.ஜி.ஆர் மாளிகை என்பது ஆளே இல்லாத டீக்கடையாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆபரேஷன் ர.ர கிட்டத்தட்ட சக்சஸை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆபரேஷன் உ.பி-ஐ விஜய் தொடங்கிவிட்டதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் முதற்கட்டமாக, கட்சியின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மொத்தமாக பனையூருக்கு படையெடுத்துள்ளது அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
அதாவது, திமுகவில் சுமார் 1,000 ஒன்றியச் செயலாளர்கள் இருக்கின்றனர். இந்த 1000 ஒன்றியச் செயலாளர்களில், திடீரென 113 பேர் மொத்தமாக தவெக இணைந்துள்ளனர். இதனால் செம்ம ஷாக்காகியுள்ள திமுக தலைமை போர்க்கால அடிப்படையில் கட்சியைச் சீரமைக்கும் பணியைத் தொடங்க உள்ளதாம். குறிப்பாக, இந்த தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு, கட்சியில் எங்கு ஓட்டை இருக்கிறது? எந்த இடத்தில் கோட்டைவிட்டோம்? என உட்கட்டமைப்பை பலப்படுத்த டிஜிட்டல் வாயிலாக கருத்துக் கேட்புகள் நடத்தி இருந்தார் ஸ்டாலின். இதனைக் கேட்டு, பலவீனமாக இருக்கும் திமுகவை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஸ்டாலின் யோசித்து முடிவெடுப்பதற்குள், திமுகவின் இந்த பலவீனமாக நிலைமையை பயன்படுத்தி இந்த ஆபரேஷன் உ.பி-ஐ விஜய் தொடங்கியுள்ளார் என்கின்றன பனையூர் வட்டாரங்கள்.
திமுகவின் பலமே அதன் ஒன்றிய, நகர, மாவட்டச் செயலாளர்கள் தான். கிட்டத்தட்ட இவர்கள் தான் திமுகவின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்திகளாகவே இருக்கும் நிலையில், இதில் 100+ ஒன்றியச் செயலாளர்களை தட்டித் தூக்கியுள்ளது தவெக. இதனால், திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்டுள்ள திமுக தலைமை, போர்க்கால அடிப்படையில் அவசரப் பொதுக்குழுவைக் கூட்டி உடனடியாக உள்கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி உடனடியாக உள்கட்சித் தேர்தலை நடத்துவதன் மூலம், கட்சிக்குள் இருக்கும் துரோகிகளை உடனடியாக களையெடுத்து, கட்டமைப்பை பலப்படுத்த முடியும் என்று தலைமை நம்புகிறதாம். அதோடு, புது முகங்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கி, அவர்களை வழிநடத்தி, இளைஞர்களை அதிகளவில் அரசியல்படுத்தவும் திமுக தலைமை இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 60+ வயதை தொட்ட பெரிய தலைகள் எல்லோரையும் ஓரங்கட்டிவிட்டு, 50 வயதிற்குள் இருப்பவர்களை தேர்ந்தெடுக்க தலைமை உத்தரவிட்டுள்ளதாம். இதன்மூலம், கட்சியைத் தற்காத்துக் கொள்ளவும், தவெக-வின் இளைஞர் ஈர்ப்பு வியூகத்தை முறியடிக்கவும் முடியும் என்பதே திமுகவின் தற்போதைய பிளானாக இருக்கிறதாம்.
அறிவாலயத்தின் இந்த அப்டேட்ஸூம் பனையூருக்கு பறந்துவிட்ட நிலையில், திமுகவின் திட்டத்தை முறியடித்து உடன்பிறப்புகளை தன் பக்கம் கூடியவிரைவில் இழுக்க விஜய் அண்ட் கோ ஸ்கெட்ச் போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.