சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த பிறகு பயணம் வெகுவாய் குறைந்தது. அது வாசிப்பை அறுத்து போட்டு விட்டது. வாசிப்புக்கென்ற சமயம் ஒதுக்க முடியவில்லை. வருடா வருடம் புது புது புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடியாமல் போய் அதுவே ஒரு குற்ற உணர்வை மேலெழ வைத்து உழன்று கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் வாசிப்போம் என்கிற நம்பிக்கை உடைந்து புது புத்தகங்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். வாங்கிய புத்தகங்களை படிக்க முடியவில்லை. எத்தனைப் படித்தேன் என்று எண்ணி விடலாம் என்கிற அளவுக்கு கடந்த பதினோரு வருடங்களில் அதிகபட்சம் முப்பது புத்தகங்கள் இருக்கலாம். வாசிப்பின் அணுக்கம் இன்றி தாளாத் துயரில் இருந்த பொழுது தான் வேறொன்று புரிந்தது.
அட!!!
சென்னையில் ரயில் பயணம் செய்த போது பிசாசு போல் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்த காலங்களில் நண்பன் ஒருவனால் எனக்கு விகடனின் அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது வாங்கவில்லையென்றாலும் சென்னை விட்டு கிளம்பி வந்த பிறகு வாராவாரம் கடை கடையாய் ஏறி இறங்கி வாங்க ஆரம்பித்திருந்தேன். என்னையும் அறியாமல் அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. இப்பொழுதெல்லாம் வருடாந்திர சந்தா. வீட்டிற்கே வந்து விடுகிறது. sacrosanct ஆக ஒவ்வொரு பக்கத்தையும் படித்து விடுவேன் அட்டைப் பட விளம்பரம் உட்பட.
புத்தகம் படிக்க முடியாமல் வருத்தப்பட்டு கொண்டிருந்த எனக்கு புரிந்தது இதுதான். வாரத்திற்கு 100 பக்கங்கள். படங்கள் போன்றவற்றை கழித்து விட்டால் கூட 80 பக்கங்கள். மாதத்திற்கு 320 பக்கங்கள். வருடத்திற்கு 3840 பக்கங்கள். பதினோரு வருடத்தில் 42,240 பக்கங்கள். எத்தனை சிறு கதைகள். தொடர்கள். கட்டுரைகள்.
அரசியல் அனுபவங்கள். சினிமா துணுக்குகள். தேர்ந்தெடுத்த ஆளுமைகளின் பேட்டிகள். தாணுவின் ‘உண்மையைச் சொல்வேன்’, நெடுஞ்செழியனின் கல்வித்தொடர், மருத்துவர் சிவராமன் மற்றும் டாக்டர் அருண்குமாரின் மருத்துவத் தொடர்கள், லூசுப்பையன் காமிக்ஸ், வலைஞர்களின் வலைபாயுதே, சினிமா விமர்சனங்கள், விருதுகள், விழாக்கள், நீலகண்டனின் உரிமைகள் மறுக்கப்பட்ட மறந்துவிட்ட எளிய மக்களின் பாடுகளைப் பேசிய கட்டுரைகள், பல இளம் எழுத்தளார்களின் நேர்காணல்கள், கட்டுரைகள், வார்த்தைப் பிரயோகங்கள், இன்பாக்ஸ், அண்டனின் AI கலாட்டா, பாலகிருஷ்ணனின் தமிழ் நெடுஞ்சாலை, வெண்ணிலா அவர்களின் அணை இலக்கியம், வாசகனாய் விகடனில் மேடைப்பேச்சு என எவ்வளவு அனுபவங்கள்.
தனியாக புத்தகம் வாசித்திருந்தால் கூட எனக்கு இந்த பரந்துபட்ட வாசிப்பும் அறிமுகமும் அனுபவமும் ஒருங்கிணைந்து கிடைத்திருக்காது. எனது எழுத்தைப் பண்பட வைத்திருக்கிறது. யோசித்து பார்த்தால் விகடன் கிடைத்த மறுநாளே நான் எல்லாவற்றையும் வாசித்து விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக. சிறு குழந்தை ஐஸ் க்ரீமை அணு அணுவாக ரசித்து உண்ணுமே, அதுபோல ஒவ்வொரு பக்கமாக அந்த வாரம் முழுக்க ரசித்து ருசித்துப் படிப்பேன். பின்னே ஆறு நாட்கள் கடத்த வேண்டுமே.
இத்தனை வருடங்கள் படித்து வருகிறேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொருத்தர் எழுதுகிறார்கள். ஆனால் எத்தனை ஆசிரியர்கள் மாறினாலும், எத்தனை எழுத்தாளர்கள் மாறினாலும் விகடனுக்கென்றே இருக்கும் அந்த மொழி நடை அப்படியே இருக்கிறது. தரம் என்றும் நிரந்தரம். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அலுவலகம் மற்றும் பல இடங்களில் ஏற்படும் ஏமாற்றம், கோவம், அழுகை, அவமானம், சோகம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை தன்னுள் வாங்கி ஒவ்வொரு நாளையும் இந்த விகடனின் எழுத்துக்கள் புத்துணர்வாக்கி புதுப்பித்து என் கையில் கொடுத்து கொண்டிருக்கிறது.
மூச்சுடும் வரைக்கும் விகடனுடன் என்பதே பேருவுகை தான்.
❤️❤️❤️